Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பை உருவாக்கியவர் பிரபாகரன் – அதைப் பாதுகாக்க வேண்டியவர் சம்பந்தன்

In இன்றைய பார்வை
Updated: 05:57 GMT, Nov 7, 2017 | Published: 05:57 GMT, Nov 7, 2017 |
0 Comments
2050
This post was written by : Varshini

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு பொதுவாகவே ஒருவகையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், அது அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும், விமர்சனங்களாகவும் மக்கள் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் மக்களைக் கேட்டதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையையும், வாக்குறுதிகளையும் நம்பி ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் வாக்களித்ததும் கண்ட பயன் இதுவரை ஏதுமில்லை என்ற நிலையில் தொடர்ந்தும் கூட்டமைப்பை நம்புவதா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேர்தலுக்கான கூட்டமைப்பாக கடந்த 8 ஆண்டுகளாக செயற்பட்டுள்ளதே தவிர, ஏனைய காலப்பகுதியில் கூட்டமைப்பின் தலைமையாக சம்பந்தன் குறிப்பிடப்பட்டாலும், தலைமையின் கீழ் பொது உடன்பாட்டுடன் செயற்படும் போக்கை கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் கொண்டிருப்பதில்லை.

ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக செயற்படுவதும், கூட்டமைப்பு பொதுவான பொறிமுறையை ஏற்படுத்தாமல் இருப்பதையும், தலைமையும் அதனோடு நெருங்கிய தமிழரசுக் கட்சியினருமே பெரும்பாலும் முடிவுகளை எடுப்பதாகவும் பங்காளிக்கட்சிகள் விமர்சனங்களை முன்வைப்பதும் வழமையான நிகழ்வுகளாக இருந்து வந்துள்ளன.

அதுபற்றிய கேள்விகள் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் சம்பந்தனை நோக்கி கேட்கப்படும்போது, கூட்டமைப்பாக இருந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து உரிமை உண்டு என்றும், தனித்துவமாகச் செயற்படும் ஜனநாயகம் இருக்கின்றது என்றும் அவ்விதமாகவே அவர்கள் செய்றபடுகின்றார்கள் என்றும், அவர்கள் எவ்விதமான அதிருப்தியைக் கொண்டிருந்தாலும் நாங்கள் மீண்டும் கூட்டமைப்பாகச் சேர்ந்து செயற்படுவோம் என்றும் பூசி மெழுகி பதிலளித்துச் செல்வதும் கேட்டுப்பழகிப்போன விடயங்களாகும்.

சம்பந்தன் என்னதான் பூசி மெழுகி கதை கூறினாலும் கூட்டமைப்புக்குள்ளே இருந்து வந்த முரண்பாடுகள் தற்போது விஷ்வரூபம் எடுத்துள்ளது. முதலில் கூட்டமைப்பு தமிழ் தேசிய கோட்பாட்டையும், அதற்குண்டான வழிமுறையையும் முதன்மைப்படுத்தாமல் தமிழரசுக்கட்சியை வளர்த்தெடுப்பதற்கான ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது என்ற விமர்சனத்தை முன்வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

பின்னர் கூட்டமைப்பே கொழும்பிலிருந்து அழைத்துவந்து முதலமைச்சராக்கிய விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் அரசியல் போக்கு காத்திரமாக இல்லை என்பதை வெளிப்படுத்தியதுடன், கூட்டமைப்பை வழிநடத்தும் பொறிமுறை ஒன்று தேவை என்று கூறி தமிழ் மக்கள் பேரவையை எற்படுத்தி கூட்டமைப்புக்கு ஆலோசனைகளை வழங்குவதாக கூறுவதுடன், கூட்டமைப்பின் தலைமை ஆதரிக்கும் புதிய அரசியலமைப்பு உட்பட தென் இலங்கை அரசுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டையும் நேர் எதிராக எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றார்.

இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும்போதிருந்து முக்கிய பங்காளியாக இருந்து வந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எ.ப் இயக்கத்தினர் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும் என்று கூறியுள்ளதுடன், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்தே தாம் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தைத் தொடர்ந்து கூட்டமைப்பிலுள்ள இன்னொரு பங்காளிக் கட்சியான நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் இயக்கத்தினரும் கூட்டமைப்பு கோட்பாடுகளுக்கு புறம்பாகவும், பொது இணக்கத்திற்கு மாறாகவும் செயற்படும் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மீது தமது கட்சிக்கும் அதிருப்திகள் இருக்கின்றன என்றும், இருந்தபோதும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறாமல் தேர்தல்களை சந்திப்பதே சரியான முடிவாக இருக்கும் என்றும், கட்சிக்குள் ஒருமித்த கருத்து இருப்பதால் அந்த முடிவை தாம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளிக்கட்சியான ரெலோ இயக்கத்திற்கும் தமிழரசுக் கட்சி தொடர்பான விமர்சனங்கள் இருப்பதை ரெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோரின் செயற்பாடுகளும், அவ்வப்போது வெளிப்படுத்தும் கருத்துக்களும் வெளிப்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது கூட்டமைப்பிலுள்ள பங்காளிகள் தொடர்ந்து முன்வைத்து வருவதுபோல் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளும், தீர்மானங்களுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றவாறாகவே தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருப்பது புரிகின்றது.

இவ்விடயத்தை தலைவர் என்ற வகையில் சம்பந்தன் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும். கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்திலேயே கேட்பதும், வீட்டுச் சின்னம் தமிழரசுக் கட்சியின் சின்னமாக இருப்பதும் தமிழரசுக் கட்சிக்கு கூடுதல் முன்னுரிமையை வழங்குகின்றதா? அல்லது சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களின் தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு வழிநடத்தப்படுவதாலும் அவர்கள் தமிழரசுக் கட்சியினர் என்பதால் தமிழரசுக் கட்சியின் அரசியல் லாப நட்டங்களை மனதில் கொண்டு தீர்மானங்களை எடுக்கின்றார்களா என்பதே கேள்வியாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் தமிழ் மக்களிடம் சென்றால் அவர்கள் வாக்குகளை வழங்குவார்கள் என்பதற்காக தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் தான்றோன்றித் தனத்துக்கு இடம்கொடுக்க முடியாது என்பதே பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனாலும் வீட்டுச் சின்னத்தைவிட்டு வேறு சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டால் மக்கள் தமக்கு வாக்களிப்பார்களா என்ற எச்சரிக்கை உணர்வும், தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து ஏனைய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்டால் அதன் பலாபலன் எவ்வாறானதாக இருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமாகவே இருந்துள்ளது.

எதுவாக இருந்தாலும் கடந்த 8 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கு வாக்களித்து கண்ட பலன் எதுவுமில்லை என்ற நிலையில் தமிழ் மக்கள் அரசியல் மாற்றமொன்றை விரும்புகின்றார்கள் என்பதால், இனியும் கூட்டமைப்பாகச் செல்வதில் பயனில்லை என்ற தெளிவு பிறந்திருக்கலாம்.

மக்கள் மத்தியில் மாற்றமொன்றுக்கான தேவை அதிகரித்து வருவதும், கூட்டமைப்பு தவிர்ந்த மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் உணரப்பட்டுள்ள நிலையிலும், இவற்றை கவனத்தில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் சம்பந்தன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.

பங்காளிக் கட்சிகளின் அதிருப்திகளை ஆராயாமலும், முரண்பாடுகளுக்கு தீர்வைக் காணாமலும் அவற்றை பூசி மெழுகிக்கொண்டிருந்தால் கூட்டமைப்பு சிதைந்து போய்விடும். சம்பந்தனிடம் கூட்டமைப்பின் தலைமை ஒப்படைக்கப்பட்ட நோக்கத்தை அவர் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பை ஒற்றுமையாகவும், பலமாகவும் வளர்த்தெடுத்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டியது சம்பந்தனின் பொறுப்பாகும்.

புதிய அரசியலமைப்பு சாத்தியமாகுமா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் கட்டப் பிரச்சினைகள். இப்போது சம்பந்தனும், சுமந்திரனும் எதிர்கொள்ளும் முதல் பிரச்சினையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதுகாப்பதாகும், ‘வருகின்றவர்கள் வரலாம், போகின்றவர்கள் போகலாம்’ என்று சுமந்திரன் கூறுவதும், ”ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதால் தமிழரசுக் கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’ என்று வடக்கு மாகாணசபையின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான சிவஞானம் கூறுவதும் அரசியல் ஆளுமையான கருத்தாக அமையாது.

இவர்கள் இருவருமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போதான காலகட்டத்தை சேராதவர்கள் என்பதால் அதை மறந்து கருத்துரைக்கின்றார்கள். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு கூட்டமைப்பின் ஆரம்பமும், அதற்கான தேவை எதுவாக இருந்தது என்ற உண்மையும் நன்றாகத் தெரியும். எனவே தமிழரசுக் கட்சி தன் மீதான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் ஆராய்ந்து பார்த்து கூட்டமைப்பின் பங்காளிகளுடன் இணங்கியும், விட்டுக்கொடுத்தும் செயற்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதற்கான நோக்கத்தையும், தேவையையும் மறந்தோ அல்லது கூட்டமைப்பு உருவாக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு சம்மந்தம் இல்லை என்று கருதியோ செயற்படுவது வரலாற்றை மறந்து செயற்படுவதற்கு ஒப்பானதாகும்.

ஈழத்துக் கதிரவன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg