Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோழர் பொப் இன் எதிர்காலம் என்ன? சிம்பாப்வே ராணுவம் எதிர் முகாபே ஆட்டத்தின் மீதான பார்வை!

In
Updated: 17:34 GMT, Nov 17, 2017 | Published: 17:32 GMT, Nov 17, 2017 |
0 Comments
1118
This post was written by : Sivaguru Siva

சிம்பாப்வே அரசதலைவர் ரொபேர்ட் முகாபே இன்று திடீரென பொதுஅரங்கில் தோன்றியமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

சிம்பாப்வே ராணுவத்தால் கடந்த செவ்வாய் இரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அதே முகாபே இன்று ஹராரே திறந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தோன்றியமை உண்மையில் ஆச்சரியகரமானதுதான்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வுக்குப்பொருந்தும் வகையில் நீலநிறத்திலான புலமைசார் அங்கி மற்றும் பட்டமளிப்பு தொப்பியுடன் சற்று இறுக்கமான முகத்துடன் தோன்றிய முகாபே தேசியகீதத்தை மக்களுடன் இணைந்து இசைத்தார்.

அரங்கில் கூடியிருந்த மக்களின் கரவொலிக்கு மத்தியில் அவரது இன்றைய பிரசன்னம் அமைந்திருந்தது.

download

இன்று இடம்பெற்ற இந்த நகர்வு குறித்து உடனடியாகவே உலக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆயினும் முகாபேயின் துணைவியின் முகமோ அல்லது சிம்பாவே கல்வியமைச்சரின் முகமோ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா காட்சிகளில் தென்படவில்லை.

முகாபேயின் துணைவி கிறேஸ் சிம்பாவேயில் தான் தங்கியிருக்கிறாரா? அல்லது வேறெங்கும் பறந்துவிட்டாரா என்பது குறித்த உறுதியான செய்திகளும் இதுவரை வெளிவரவில்லை.

_98759159_mugabe1680

இன்று காலை இவ்வாறான ஒரு காட்சி பகிரங்கப்படுவற்கு முன்னர்வந்த செய்திகள் யாவும் பதவி விலக முகாபே மறுப்பு தெரிவிப்பதாகவே இருந்தன.

93 வயதான முபாபே சிம்பாப்வே ராணுவத்தின் வீட்டுக்காவலில் இருந்தபோதும் 37 வருட அதிகார ஆசையை துறப்பதற்கு அவர் தயாராக இல்லை.

ராணுவ அழுத்தத்தினால் தான் அதிகாரபூர்வமாக பதவி விலக ஒப்புக்கொண்டால் அது ராணுவத்தின் தலையீட்டை சட்டபூர்வமாக்கிவிடும் என்பதை முகாபே அறிந்து வைத்திருப்பதால் அவரும் முரண்டுபிடிக்கிறார்.

download (1)

மக்களின் நலனை கருதி முகாபே உடனடியாக பதவி விலக வேண்டுமென முகாபேயின் அரசியல் எதிரியும் எதிர்கட்சி தலைவருமான  மோர்கன் சங்கிராய் போன்றவர்கள் கோரிக்கை விடுத்தாலும்  பதவிவிலக இதுவரை முகாபே தயார் இல்லை.

இதற்கிடையே சிம்பாப்வே ராணுவத்தளபதி சிவென்காவுக்கும முகாபேக்கும் இடையிலான இந்த அதிகார ஆட்டத்தில் சமரசமான முடிவு ஒன்றை எட்டுவதற்கு ஆபிரிக்க பிராந்தியத் தூதர்கள் தொடர்ந்தும் பாடுபடுகின்றனர்.

ஆயினும் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுகள் குறித்து  அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.

முகாபேக்கும் ராணுவ தரப்புக்கும் இடையில் தமது மரதனோட்ட பேச்சுக்களை தொடர்வதற்காக தென்னாபிரிக்க அமைச்சர்கள்; கடந்த புதன் முதல் ஹராரேயில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையே ராணுவத்தளபதி சிவென்காவும் முகாபேயும் கைகுலுக்கிக் கொண்டபோது எடுக்கப்பட்ட நிழற்படங்களும் நேற்று மாலை இராணுவத்தால் வெளியிடப்பட்டது.

இந்த காட்சிகளில் மனப்பாரம் ஏதுமற்ற தோற்றத்தில்தான் முகாபே காணப்பட்டார்.

இன்று காலை இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூட முகாபேயை மதிப்புடன்  படைகளின் அதியுயர் தலைவர் எனவே குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் இவ்வாறான மதிப்புக்குரிய விளிப்புகள் இருந்தாலும் முகாபேயை அதிகாரத்தில் இருந்த கழற்றும் வரை ராணுவம் ஓயாது என்பதும் வெளிப்படையானது

தனக்குப்பின்னால் சனு பி.எப் கட்சி மற்றும் அரசதலைவர் பதவி ஆகியவற்றை தனது  மனைவி கிரேஸ்சுக்கு வழங்குவதற்காக துணைஅரசதலைவர் எமர்சன் மனங்காக்வாவை முகாபே முற்றாக ஓரங்கட்டிய நகர்வு இப்போது அவரையே ராணுவத்தலையீடு வரை திருப்பித்தாக்கியுள்ளது

ஏனெனில் சிம்பாவே விடுதலைப்போராட்டத்ததுக்கு முகாபேயைப் போல பங்களித்த இன்னொருவர் மனங்காக்வா.

போராட்டகாலத்தில் போது ராணுவம், உளவுத்துறை மற்றும் சனு பி.எப் கட்சி ஆகிய முன்று பிரிவுகளுக்கும் முக்கிய இணைப்பாளராக செயற்பட்டவரும் அவர்.

அதேபோல முகாபேயின் அதிகாரகாலத்தில் மனங்காக் வாவும் முறைகேடுகளை செய்ததான  கடும் விமர்சனங்களும் உண்டு.

ஆனால் முகாபே விடயத்தில் ராணுவத்துக்கு சவால்கள் உள்ளன. என்னதான் இப்போது முகாபேயை வெறுத்தாலும் இற்றைக்கு 4 தசாப்பதங்களுக்கு முன்னர் சிம்பாவே என்ற நாடு உருவாவதற்காக தோழர் பொப் என்ற அடைமொழியில்  போராளித்தலைவராக இருந்தவர் அவர்.

அதனால்  93 வயதில் முகாபேயை ராணுவத்தால் அதிகம் துன்புறுத்தவும் முடியாது.

இதனால் ராணுவம் கொஞ்சம் பொறுமைகாக்கின்றது.

_98767507_043013139-1

பெரும்பாலான சிம்பாவேமக்களை பொறுத்தவரை 93 வயதான முகாபே பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை

ஆயினும் சமரசமாகவே இந்தவிடயம் தீர்க்கப்படவேண்டும் என்பதிலும் மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்

இதற்கிடையே முகாபே பதவிவிலக தொடர்ந்தும் மறுத்தால் அடுத்தவாரம் ஒன்றுகூடவுள்ள சானு பி. எப் கட்சி; அவரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை எடுக்ககூடும்.

இதற்காக முன்னகர்வுகளை கட்சியின் முக்கியதலைவர்கள் எடுத்து வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே சிம்பாவேயின் மதத்தலைவர்கள் சட்டவாளர்கள் மற்றும் குடிசார் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை  ராணுவம தடுத்துவைப்பது சட்டவிரோதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தடுத்துவைக்கப்ட்ட அமைச்சர்கள. மற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவாக இல்லாமல்  அரசியலமைப்பு உரிமைகளை மையப்படுத்தியே இந்தக்கருத்துகள் வந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற நிலைப்பாடே ஆபிரிக்க ஒன்றியத்திடமும் உள்ளது.  ராணுவ ஆட்சியைவிட  அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் ஆபிரிக்க ஒன்றியம் உறுதியாக உள்ளது.

முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுவதாகவும் ஆபிரிக்க ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆக மொத்தம் ரொபேர்ட் முகாபே பதவிவிலகவேண்டும். ஆனால் இந்தவிடயத்தில் ராணுவத்துக்கு அவரை பாம்பு என தாண்டிச்செல்லவும் முடியவில்லை. பளுது என மிதிக்கவும் முடியவில்லை.

இதனால் முகாபேயுடன் இடைநிலை உடன்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும்  சிறிது காலம் காத்திருக்கவேண்டும்போலத்தான் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg