பிரெக்சிற்: மேலதிக யோசனைகளை விரைவில் முன்வைக்க வலியுறுத்து
பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்கில், அது தொடர்பான மேலதிக யோசனைகளை எதிர்வரும் டிசெம்பர் மாத முற்பகுதியில் பிரித்தானியா முன்வைக்க வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை கோதென்பேர்க் (Gothenburg) நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தபோதே, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் டொனால்ட் டஸ்க் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்பேச்சுவார்த்தைகளின்போது, குடிமக்கள் உரிமை தொடர்பில் பிரித்தானியாவால் சிறந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிதித்தீர்வு மற்றும்அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பில் முன்னேற்றங்கள் காணப்பட வேண்டியுள்ளது’ என்றார்.
‘எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியப் பேரவை கூடவுள்ளது. இதற்கு முன்னராக நிதித்தீர்வு மற்றும் அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பில் மேலதிக யோசனைகளை எம்மிடம் பிரித்தானியா முன்வைக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதன்போது, பிரித்தானியாவுடன் எதிர்கால வர்த்தக உறவு தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு சிறந்த சமிக்ஞை காட்டப்படுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டஸ்க் தெரிவித்துள்ளார்.