Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க தயாராகும் இளைஞர் அணி!

In இலங்கை
Published: 17:33 GMT, Nov 19, 2017 |
0 Comments
1277
icon_com
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பங்கெடுப்பது தொடர்பான கூட்டம் ஒன்று இன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை மூன்று மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது.

தமது பிரதேச அபிவிருத்தியை தீர்மானிக்கும் இந்த தேர்தலை தாம் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த சுயேட்சை அணியினர் இந்த தேர்தலுக்கும் கட்சி தலைவர்களினதும் அரசியல்வாதிகளினதும் கால்களை பிடித்து சேவகம் செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டனர்.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடாது தாம் சுயமான சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் அதற்கு தம்மோடு இணைந்து ஊரின் பிரதேசத்தின் பெரியவர்கள் அனைவரையும் இணைத்து செயற்படுமாறும் கூட்டத்தின் ஒழுங்கமைப்பாளர்களை கேட்டுகொண்டனர்.

சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிட்டு தமது பிரதேசத்தின் அரசியலை தாம் கையில் எடுக்கபோவதாகவும் எந்தவித அரசியல் கட்சிகளின் முகவர்களினதும் பேரம் பேசலுக்கு சோரம் போகமாட்டோம் எனவும் உறுதிபடத் தெரிவித்தனர்.

இவ்வாறு இளைஞர்கள் தமது பிரதேச அரசியலில் ஆர்வம் கொண்டு தாமாக முன்வந்த இந்த செயற்பாட்டை அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் பலரும் வெகுவாக பாராட்டியதை அவதானிக்க முடிந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg