Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசியக் கொடி விவகாரம்- அமைச்சர் சர்வேஸ்வரன் விளக்கம்

In இலங்கை
Published: 09:45 GMT, Nov 23, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Elakkiya

பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றவில்லை என்ற சர்ச்சைக்குள் சிக்கியுள்ள வட.மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தன்மீதான அவதூறுகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் சர்வேஸ்வரன் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “வட. மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜெயதிலக அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் வவுனியா பரக்கும்ப மகாவித்தியாலயத்தில் மூவின மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்விற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

இத்தகைய நிகழ்வுகளில் கொடியேற்றுவது மரபல்ல. எனினும், கொடியேற்றும் நிகழ்வில் மாகாண கொடியை நான் ஏற்றுவதாகவும் வலயப் பணிப்பாளர் தேசியக் கொடியை ஏற்றுவதாகவம் பாடசாலை கொடியை அதிபர் ஏற்றுவார் எனவும் குறிப்பிட்டேன். மாகாண கொடி அங்கிருக்கவில்லை என்பதால் அதற்கு பதிலாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனை ஜெயதிலக ஏற்றிவைத்தார்.

கொடியேற்றல் நிகழ்வை தொடர்ந்து பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த கோயிலில் வழிபாடுகள் இடம்பெற்றன. அதில் நானும் பங்கேற்றிருந்தேன். இந்த விடயம் அந்தப் பாடசாலை நிகழ்வில் ஒரு பிரச்சினையாக எழவில்லை.

எனினும் சில ஊடகங்கள் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும். இவ்விடயம் தவறாகத் திரிபுபடுத்தப்பட்டு நான் தேசியக் கொடியை அவமதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இது முற்றிலும் தவறானது. தேசிய கொடியை சேதப்படுத்தினாலோ, அல்லது அதனை ஏற்றவிடாமல் தடுத்தாலோ அது அவமதிப்பதாகும். மாறாக, எனது சார்பில் எமது உயரதிகாரியை அதனை ஏற்றும்படிப் பணித்ததுடன், அது ஏற்றப்படும்போது உரிய கௌரவத்தையும் அளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை தமிழ்த் தேசிய உணர்வுடைய எவரும் இக்கொடியினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட வட. மாகாண கல்வி அமைச்சர், கடந்த 65 ஆண்டுகாலமாக தமிழ்த் தேசிய இனத்திற்காக குரல்கொடுத்துவரும் தலைவர்களின் வழியை தானும் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மூவின மக்களும் விரும்பி மதித்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கொடியினை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக எல்லோரும் ஏற்றுக்கொண்ட கொடியினை நான் மட்டுமே ஏற்கவில்லை என்பது போன்ற போலிப் பிரசாரம் செய்யப்படுவது ஆச்சரியம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடம் தொடர்பாக நாடாளுமன்றில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மௌனம் சாதித்ததுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியில் தன்னை ஒரு போலி தேசியவாதி என விமர்சனம் செய்ய தயங்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இவ்வாறு விமர்சிப்பதன் மூலம் தமிழரசுக் கட்சியினர் தங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டதை எண்ணி அவர்கள்மீது இரக்கப்பட மாத்திரமே முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg