Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் அறிவிப்பும் வேட்டையாடப்பட்ட வேட்பாளர்களும்!

In சிறப்புக் கட்டுரைகள்
Updated: 02:20 GMT, Dec 3, 2017 | Published: 07:56 GMT, Nov 30, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Vithushagan
9314257571856818980election-depart-l

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்ததிலிருந்து தமிழ்க் கட்சிகள் ஒருவிதமான தடுமாற்றத்துடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்றும் சில கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன.

ஈ.பி. ஆர்.எல். எப் இயக்கம் வெளியேறிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது மூன்று கட்சிகளின் கூட்டாகவே இருக்கின்றது. விரைவில் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியாகச் செயற்பட்ட  சிறிதரன் அணியினர் இந்தக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்று தெரிய வருகின்றது. அதற்கான இணக்கத்தை தமிழரசுக் கட்சியும், புளொட் இயக்கமும் வழங்கியிருக்கின்றன.

சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு எதிராக  சிறிதரன் அணியைப் பயன்படுத்திக்கொள்வதற்கான காய் நகர்த்தலே இது என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரை என்றும் பரம விரோதியாக விமர்சித்து வருகின்ற ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் கூட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும், சம்பந்தரின் விருப்பமின்மையும், ஆனந்த சங்கரியின் அதீத பேராசையும் அந்த முயற்சிகளை தடைபோட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று இன்னும் கூட்டமைப்பைத்தான் தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் என்பதை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

ஏன் என்றால் இம்முறை தேர்தல் களத்தில் கூட்டமைப்புக்கு நேரடியானதும், பலமானதுமான எதிரணியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுரேஸ்பிரேமச்சந்திரனும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டணியானது தீவிரமாக இருக்கும்.

இந்த மோதல் வடக்கு கிழக்கில் மட்டும் இல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடருகின்ற வாய்ப்புகள் இருக்கின்றன.

சுரேஸ்பிரேமச்சந்திரனும், கஜேந்திரன்குமாரும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் கூட்டணிக்கு இதுவரை பெயர் இடவில்லை. ஆகவே சுயேற்சையாக இவர்கள் தேர்தலில் களம் இறங்குவதைவிடவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடலாம் என்றே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இந்த சைக்கிள் சின்ன அணியினரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியினர் என்றும், அல்லது இவர்களே தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை என்றும் இந்தத் தேர்தலில் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

மறுபக்கத்தில் ஈ.பி.டி.பி மூன்றுவிதமான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது. அதாவது வடக்கு கிழக்கில் தனித்தே போட்டியிடுவது என்றும், அல்லது பிரந்தியத்தில் சக கட்சிகளுடனும், முற்போக்கு சக்திகளுடனும், பொது அமைப்புகளுடனும் சேர்ந்து போட்டியிடுவது என்றும், அல்லது தேசிய கட்சியுடன் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அணியோடு இணைந்து தேசிய கூட்டாகப் போட்டியிடுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சி தெரிவித்தது.

இந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவற்றுக்கு இடையே தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளோடு முரண்பட்டு உட்கட்சிப் பிரச்சினைக்கு தமது தலைமைகள் தீர்வு வழங்காத நிலையில் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி ஜனநாயக தமிழரசுக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஒன்றும் தமிழரசுக் கட்சியின் மாணவர் அணித் தலைவர் சிவகரன் தலைமையில் மன்னாரில் உதயமானது.

அந்தக் கட்சிக்கு தலைமை ஏற்குமாறு தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் பேராசியருமான சிற்றம்பலத்தை சிவகரன் அழைத்தபோதும், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கு தலைமை ஏற்பதற்கு தயக்கத்தை வெளிப்படுத்தி வருவதுடன், தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டே கட்சிக்குள் ஜனநாயகத் தன்மைக்காக போராடுவதுதான் சரியான தீர்மானமாக இருக்கும் என்று பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்திருப்பதால், சிவகரன் அணியினர் விரக்தியடைந்திருப்பதாகவும், இளைஞர்களை அணிதிரட்டி தமிழரசுக் கட்சிக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாவதாகவும் தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தலில் இளைஞர் அணி ஒன்று சுயேற்சையாகவே போட்டியிடும் என்று அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய சட்ட வரைபில் பிரகாரம் இம்முறை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளைத் தவிர சுயேற்சையாக குழுக்கள் போட்டியிடுவது குறைவாகவே இருக்கும்.

அதற்குக் காரணம் இந்தத் தேர்தலில் வட்டாரத்தில் செல்வாக்கு உள்ளவர்களே போட்டியிடுவது நல்லது. முன்னரைப்போல் குறிப்பிட்ட பிரதேச செயலாக எல்லைக்குள் விருப்பு வாக்குக் கேட்டு பரவலாக பிரசாரம் செய்து ஆகப்போவது எதுவும் இல்லை.

அடுத்ததாக சபையின் மொத்த உறுப்பினர்களில் கட்டாயமாக 25 வீதம் பெண்கள் உள்ளடங்கியிருப்பதற்கு ஏற்றவாறான வேட்டுமனுவையே தாக்கல் செய்யவேண்டும். அதில் தவறு ஏற்பட்டால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும் ஆகவே சுயேட்சைக்குழுக்கள் பெண் வேட்பாளர்களை திரட்டுவது சிரமமாக இருக்கும்.

பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்று ஒரு வேட்பாளருக்கு தலா 1500 ரூபா கட்டுப்பணம் கட்டவேண்டும். சுயேட்சைக்குழு தலா ஒரு உறுப்பினருக்கு 5000 ரூபா கட்டுப்பணமாக கட்ட வேண்டும்.

இவ்வாறு பல விடயங்களை சுயேட்சைக்குழுவாக போட்டியிடுபவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே சுயேட்சைக்குழுக்களின் தொல்லை குறைவாகவே இருக்கும்.

இவற்றுக்கு அப்பால் வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, பொது எதிரணியான பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதையே தமது முதல் தெரிவாகக் கொண்டு வேட்பாளர்களை வேட்டையாடி வருகின்றன.

தேசியக் கட்சிகளில் நேரடியாகப் போட்டியிடுவதற்கு பின்னடிக்கின்ற நிலைமையே மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் காணப்படுகின்றது. இருந்தபோதும், நல்லாட்சி அமைவதற்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்பதால், இப்போதும் தமிழ் மக்களுக்கு இந்த ஆட்சியாளர்களின் மீது விரும்பம் இருக்கின்றது என்று இந்தக் கட்சிகள் நம்புகின்றனர்.

முக்கியமாக தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கில் இருக்கும் சிலர், தேசிய கட்சிகள் மீது மக்களுக்கு விருப்பம் இருக்கின்றது என்றும், பிராந்தியத் தலைமைகள் மீது தமிழ்மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பதால் தேசிய கட்சிகளோடு சேர்ந்து பயணிக்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள் என்றும், அதை இன்னொரு வகையாகக் கூறினால், இணக்க அரசியல் என்றும், தேசிய அரசோடு பேசியே பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று பிராந்தியத் தமிழ்த் தலைமைகள் கூறுவதால், அத்தகையவர்களை ஏன் இடையில் முகவர்களாக வைத்துக்கொள்ள வேண்டும் நேரடியாக தேசிய கட்சியுடனேயே தொடர்புகளை பேணுவது சிறந்தது என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள் என்று தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமது சுயலாப அரசியல் காரணமாக தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு தவறான செய்தியை ஓதுவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்திலில் போட்டியிடுவதற்கு தயாராகிவரும் கட்சிகள் வேட்பாளர்களைத் தேடிப்பிடிக்கும் வேட்டையில் தீவிரமாக ஈருபட்டுள்ளார்கள். அதிலும் பெண் வேட்பாளர்களை திடீரென்று தமது கட்சியில் வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்பதிலும், அவர்களை நம்பி பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு சம்மதிப்பதும் எளிதான காரியங்களாகத் தெரியவில்லை.

ஒரு வட்டாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பார்களானால் அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் கட்சிகள் வேட்பாளர்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. இதனால் ஒரு வட்டாரத்தில் குறிப்பிட்ட பெரும்பான்மையினருக்குள் பலர் பல கட்சிகளில் வேட்பாளர்களாக போட்டியிடும் நிலைமையே அதிகமாகக் காணப்படுகின்றது.

இதனால் அந்தப் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, அவர்கள் தமது கிடைக்க வேண்டிய உறுப்பினர் நிலையை பறிகொடுக்கும் ஆபத்திற்கும் இந்தக்கட்சிகள் வழிவகை செய்வதுபோல் தெரிகின்றது.

இவ்வாறு சூடு பறக்கத் தொடங்கியிருந்த தேர்தல் திருவிழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி அதிகார சபைகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மறு பரிசீலனை செய்து திருத்தங்களை செய்வதற்காக உள்ளுராட்சி அமைச்சரினால் அமைக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை உள்ளடக்கியதான அதிவிஷேட வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை அறிவிக்கும் வர்த்தமனி அறிவித்தலை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எல்லை நிர்ணயப் பரிந்துரைகளில் சில மாவட்டங்களில் தவறுகள் இருப்பதாகவும் தொடுக்கப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தேசித்துள்ள நிலையில் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதிவரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைப் பார்க்கும்போது டிசம்பர் 4ஆம் திகதிக்குப் பின்னர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எவ்விதமாக அமையும் என்பதையும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு 2018ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி தேர்தல் நடைபெறுமா என்பதையும் இப்போது கூற முடியாது. பெரும்பாலும் இந்த அரசு தேர்தலை அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம்வரை ஒத்திப்போடுவதற்கே சாத்தியங்கள் இருக்கின்றது.

தேர்தல் குறித்த காலத்தில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தேர்தலை மட்டும் கூட்டு அமைத்துக்கொண்டவர்களிடையே நீடித்த ஒற்றுமை பேணப்படுமா? என்பதும், தேர்தலை மனதில் கொண்டு மற்றவர்கள் மீது சேறுபூசத் தொடங்கியவர்களின் பிரசாரங்கள் இதே வீரியத்துடன் தொடருமா? கட்சிகளால் இரவு பகலாகவும், அவசரம் அவசரமாகவும் ஆள்பிடித்து வேட்பாளர்களாக சேர்க்கப்பட்டவர்களை தொடர்ந்து அந்தக் கட்சிகளால் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

- ஈழத்துக் கதிரவன் -

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg