Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மைச் சமூகம் பேரினவாத மனோநிலையிலிருந்து மாறவில்லை: ஜனநாயகப் போராளிகள் கட்சி!

In இலங்கை
Published: 09:35 GMT, Dec 2, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Ravivarman
e

தமிழர்களை எந்தவேளையிலும் எதற்காகவும் கைதுசெய்ய முயற்ச்சிக்கலாம் என்பது, இப்போதும் சிங்களதேசம் தனது பேரினவாத மனோநிலையிலிருந்து சற்றும் மாறவில்லை என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘வடகிழக்கு பரப்பெங்கும் 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு போராளிகள், பொதுக்கள் சமூக அமைப்புக்கள் மற்றும் பற்றாளர்களால் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக மக்களின் தன்எழுச்சியான உணர்வுகளையும் மன வேட்கையினையும் பறை சாற்றியிருக்கிறது.

மாறாக தெற்கில் பெரும்பான்மையாக சிங்கள மக்கள் கூடிய நிகழ்வொன்றில் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிய கருத்துக்கள் தமிழர் தரப்பிலே பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

அதிக வெளிப்பாட்டுத் தன்மையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகள், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைச் சிதைக்கத்தக்க வகையான சம்பவங்களை தவிர்த்துக் கொள்ளுதல், ஏற்கனவே துயரங்களுடன் வாழும் தாயக மக்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலையைப் பேணுதல் என்ற இரட்டை நிலைப்பாட்டையும் எமக்குள் சுமத்தியிருந்தது.

இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிய கருத்துக்கள் தமிழர் வாழ்வியல் மரபுரிமைகள் தமிழ் மக்களுடைய ஜனநாயக எழுச்சி மற்றும் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வெழுச்சியை தடுக்க நினைக்கும் நல்லாட்சி அரசின் ஓர் இடர்பாடான அணுகுமுறையாவே இதனை நாம் பார்க்கவேண்டியுள்ளது.

தெற்கில் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவர்வதற்கான ஓர் இனவாத தோற்றத்தையும், வடகிழக்கிலே மீள் இணக்கம் மற்றும் தேசிய சகவாழ்வு என்ற வேடத்தையும், சர்வதேசப் பரப்பில் நீதி மற்றும் ஜனநாயகப் போர்வையையும் போர்த்துக்கொண்டு இலங்கையின் நல்லாட்சி அரசு தனக்குள் தானே முரண்பட்டதொரு வகிபாகத்தை ஆற்றுகின்றதோ என்கின்ற சந்தேகத்தையும் கேள்வியையும் அது எமக்குள் எழுப்புகின்றது.

நீதிக்கு முரணான விசாரிப்புக்கள் மற்றும் கைதுகள், தடுத்து வைத்தல், சித்திரவதைகளுடன் கூடிய விசாரணைகள் என்று தொடரும் அனைத்துலக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் இந்த வாதம் இலங்கையின் நல்லாட்சி அரசும் தேசிய இனங்களின் ஜனநாயக நடவடிக்கைககளின் மேல் தனது புலனாய்வு மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை திணிக்க எத்தனிக்கின்றதோ என்ற விசனத்தையும் எமக்குள் ஏற்படுத்தியுள்ளது’ என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg