Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பாக நடந்தது மாவீரர் நிகழ்வுகள்: நல்லாட்சிக்கே நற்பெயர்!

In இன்றைய பார்வை
Updated: 13:56 GMT, Dec 4, 2017 | Published: 13:56 GMT, Dec 4, 2017 |
0 Comments
1449
This post was written by : Surenth

மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடைபெறவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடியது அரசாங்கம் தான். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களும், மாவீரர் தினத்தின் அனுஷ்டிப்புக்களும் தமிழ் மக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவிதமாக கொண்டாடப்படாமல், குழுக்களாக ஆங்காங்கே சிலர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதிலும் வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த பிரபாகரனின் வீட்டுக்கு முன்பாகச் சென்று அங்கே கேக் வெட்டியும் சிலர் கொண்டாடினார்கள்.

வடமராட்சியில் வெள்ளைத் துணியில் மஞ்சள் வர்ணத்தில் புலிச்சின்னத்தை அச்சு செய்து அதைப் பறக்கவிட்டும் மகிழ்ந்தனர். ஒரு சிலர் தமது முகநூலில் பிரபாகரனின் புகைப்படங்களை பிரசுரித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் துக்கத்தை அனுஷ்டிப்பதைப்போல், பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடவும் பொதுவான இடம் அமையப்பெறுமானால் அந்த இடத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை பொது நிகழ்வாகக் கொண்டாட முடியும் என்றும் சிலர் அங்கலாய்க்கின்றனர்.

மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த காலத்தில் தமிழ் அரசியல் தலைமைகளால் ஆங்காங்கே ஆளுக்கொரு தீச்சட்டியில், கற்பூரத்தைப் போட்டு எரித்து ஒப்புக்கு தலையைக் குணிந்து அஞ்சலி செலுத்துவதாக நாடகமாடி உயிர் நீத்த மாவீரர்களை அவமானப்படுத்தியது போலல்லாமல், விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்தும், படையினரால் நொறுக்கப்பட்ட நினைவு கற்களை மீண்டும் நிறுவியும், சிகப்பு, மஞ்சள் கொடிகளைக் கட்டியும், அனுஷ்டிக்கப்பட்டது.

இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பங்கு கொள்வதை முன்னாள் போராளிகள் புறக்கணித்திருந்ததுடன், இறந்தவர்களின் சமாதிகளில் தீபம் ஏற்றி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என்று வெளிப்படையாக அறிவித்தும் இருந்தார்கள். அந்த அறிவிப்பு காரணமாக அரசியல்வாதிகள் பங்கு கொள்ளவில்லையா, அல்லது வேறு அரசியல் நோக்கங்களுக்காக தந்திரமாக ஒதுங்கி இருந்துவிட்டார்களா? என்பது புரியவில்லை.

அரசியல் தலைமைகள் கலந்து கொள்ளாமலே மாவீரர்களை நினைவுகூறும் நிகழ்வுகள் நேர்த்தியாக நடந்துள்ளது. 27ஆம் திகதி இரவு மாவீரர்களின் உறவினர்கள் துயிலும் இல்லங்களில் கூடி, கைகளில் மெழுகு வர்த்திகளை ஏந்தியபடி தனது உறவுகளை எண்ணி கண்ணீர் வடித்து அழுதார்கள். யார்? தலைமை தாங்குகின்றார்கள் என்பது தெரியாமலே மாவீரர் நிகழ்வுகள் நேர்த்தியாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது.

ஆங்காங்கே மாவீரர் நிகழ்வுகளைக் குழப்புவதற்கு படையினர் முயற்சித்ததாக செய்திகள் வெளியாகிய போதும் அந்தச் செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இம்முறை தமிழர்களை இடையூறு செய்யாமல் மாவீரர்களின் நினைவை அனுஷ்டிக்கச் செய்யவேண்டும் என்று அரசாங்கமே விரும்பியது ஆகவே படையினர் குழப்புவதற்கு முயற்சித்தார்கள் என்ற செய்திகள் தற்செயலாக நடந்த சம்பவமாகவே இருக்கலாம்.

இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அத்தகைய கோரிக்கையை விடுக்காத போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனும், சாந்தியும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இறந்தவர்களுக்கு தாம் வீர வணக்கத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இன்று நாங்கள் அரசியல் அநாதைகளாக இருப்பதும், அரசின் கட்டுப்பாட்டுக்குள் கிடைப்பதைக்கொண்டு சாப்பிட்டு உயிர் வாழ்வதும் காலத்தின் கொடுமையான விடயங்களாகும். ஆனால் இங்கே வித்துடலாகப் புதைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாவீரனும், இலங்கை அரசை எதிர்த்தும், அதன் சலுகைகளை அடியோடு வெறுத்தும் உயிரைத் துச்சமாக எண்ணி களமாடி வீழ்ந்தவர்கள்.

அவர்கள் உறங்கும் துயிலும் இல்லத்திற்கான சுற்றுமதிலை நாங்கள் ஒவ்வொரு கற்களாகவேணும் ஒரு நாள் கட்டி எழுப்புவோம். ஆனால் அரசின் பணத்தில் அதுவும் குறுக்கு வழியில் ஒதுக்கி சுற்றுமதிலை புனரமைப்புச் செய்து அதில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. என்ற கருத்தை முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

கிழக்கு பல்கலையில் புலிக்கொடி பறக்கச் செய்தும், வாகரையில் மாவீரர்களின் துயிலும் இல்லத்தில் நினைவு அனுஷ்டிப்புமாக கிழக்கிலும் மாவீரர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மக்கள் சுதந்திரமாக மாவீரர் நிகழ்வை அனுஷ்டிக்க முடியுமான இயல்பு நிலையும், பாதுகாப்பும் வடக்கு கிழக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களை அழுவதற்கும், தீபங்கள் ஏற்றுவதற்கும், பழைய கல்லறைகளை வழிபடுவதற்கும் அனுமதித்தால் போதும் அதையே பாரிய வெற்றியாகவும், வீரசாகஸமாகவும் கருதிக்கொண்டு செயற்படுவார்கள்.

அதைத் தடுத்து நிறுத்தப்போனால், அரசு மீது தேவையற்ற விமர்சனங்கள் எழுவதுடன் தமிழ் அரசியல்வாதிகளும் அதற்காகக் குரல்கொடுக்க முற்படுவார்கள். எனவே தென் இலங்கையில் தலையில் தீ பிடித்தது போல் நல்லாட்சியின் கூடாரம் எரியத் தொடங்கியுள்ள சூழலில் வடக்கு கிழக்கிலிருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் தேவை இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கத் தேவையில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

மாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமைகளுக்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே கொந்தளிப்பாக பேசப்பட்டு வந்த காணி நிலப் பிரச்சினையும், காணாமல் ஆக்கப்பட்டோரிக் விவகாரமும் பேசாப்பொருளாகவே போய்விட்டதான நிலைமையே தற்போது நிலவுகின்றது.

மாவீரர் நினைவு நாள் அனுஷ்டிப்புக்களையோ, பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களையோ அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு பிரதான காரணம், நல்லாட்சி அரசாங்கத்திற்குள்ளே பிரதான கட்சிகளான சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகும், குறிப்பாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதுடன் தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அணியுடன் சேர்ந்து பயணிப்பதே சரியான தந்திரோபாயமாக இருக்கும் என்றும், இல்லாவிட்டால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கைகள் ஓங்கிவிடும் என்றும், சுதந்திரக் கட்சி பல துண்டுகளாகிவிடும் என்றும், அவ்வாறான ஒரு சூழலில் கட்சியை இழந்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் சூழ் நிலைக்கைதியாகவே ஜனாதிபதி இறுதிக் காலம்வரை இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான சுதந்திரக் கட்சியின் விசுவாசிகள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மூடி மறைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தபோதும், அந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களையும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரம சிங்கவையும் விசாரணைக்கு உட்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி மைத்திரிபால கொட்டிச்சரித்துவிட்டார் என்ற கொந்தளிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இருக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் அரசியல் இராசிப்பலனும் அவரை ஜனாதிபதியாகுவதற்கு ஒத்தழைக்காமலும், அவர் பிரதமராக, ஒரு வருடமோ, இரண்டு வருடமோ மட்டுமே பதவியில் இருக்கச் செய்வதுடன் பின்னர் ஆட்டம் காணவே செய்துள்ளது. அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கமாவது பிரதமரின் ஆட்சி நீடிப்பை நீடிக்க உதவுமா? என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இப்போது சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையுமானால், நல்லாட்சி அரசு தனது காலத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது. அதாவது பல முனைகளிலும் முன்னெடுக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும், இந் நாள் ஜனாதிபதி மைத்திரிக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெறுமாக இருந்தாலும், அடுத்த விநாடியே நல்லாட்சி அரசு கவிழ்ந்துவிடும்.

அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பட்டு சுதந்திரக் கட்சி வெளியேறுமானால் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று சிலர் ஆருடம் கூறுகின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் தென் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் எஞ்சிய செல்வாக்கும் இழந்து போகும் என்றும், அத்தகைய சூழலை எதிர்க்கட்சிகள் மிக வசதியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்ற எச்சரிக்கை உணர்வும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் இல்லாமல் இல்லை.

ஈழத்துக்கதிரவன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg