ஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியபோதே, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்குமிடையில் பேச்சுவார்த்தைக் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டுமெனவும், ட்ரம்ப்புக்கு மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நாளை (புதன்கிழமை) அறிவிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் (3ஆம் திகதி) செய்தி வெளியாகியிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்தத் தீர்மானத்துக்கு, ஜோர்டான், துருக்கிய ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் இந்த அறிவிப்பைத் தடுக்கும் நோக்கில் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடனும் கலந்துரையாடியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.