Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கௌரவக் கொலையாளிகளுக்கு தமிழகத்தில் மரணதண்டனை!!

In இந்தியா
Updated: 16:18 GMT, Dec 12, 2017 | Published: 15:58 GMT, Dec 12, 2017 |
0 Comments
1702
This post was written by : elayathambi

தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் கொலைக்கான தீர்ப்பு இன்று திருப்பூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளை சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் இளைஞனான சங்கரைக் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் கைதாகிய மணமகளின் தந்தை, தாய், தாய் மாமன் உள்ளிட்ட பதினொரு குற்றவாளிகளில் ஆறு பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிற இந்திய மாகாணங்களிலும் அடிக்கடி நிகழும் இத்தகைய கௌரவக் கொலை ஒன்றிற்கு, மரண தண்டணை விதித்த  முதலாவது தீர்ப்பு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இக் கொலைக்கான வழக்கு வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. குறித்த வழக்கிற்கு, இன்று தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன், தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளார். மற்றுமொரு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், எட்டாவது குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மணமகள் கௌசல்யாவின் தாயாரான அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரை அவர் திருமணம் செய்தவரான கௌசல்யாவின் தந்தையும்  கூலிக் கொலையாளிகளும் படுகொலை செய்திருந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்டப்பகலில் இக்கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. கொலையாளிகள் மணமக்கள் இருவர் மீதும் கோரமான முறையில் வாள் கொண்டு தாக்கி இருந்தனர். இவ் வாள்வெட்டில் சங்கர் உயிரிழந்தார். படு காயங்களுக்கு இலக்கான மணமகள் கௌசல்யா சிகிச்சைகளின் பின்னர் உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தை அடுத்து மணமகளின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, மணமகளின் தாய் மாமனான பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரை பொலிசார் கைது செய்திருந்தனர்.  குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட இக் கடுமையான தீர்ப்பு, சமூகத்தில் நிலவும் வன்கொடுமைகளுக்கும், சாதிக் கொலைகளுக்கும் சரியானதொரு பதிலடி என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg