Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறுகலைக் கைவிடுமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஷுமா வலியுறுத்து

In
Published: 05:52 GMT, Dec 17, 2017 |
0 Comments
1115
This post was written by : Suganthini

தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு புதிய தலைவரைத் தெரிவுசெய்யவுள்ள நிலையில், கட்சிக்குள் காணப்படும் முறுகல் நிலைமை கைவிட்டு ஒன்றுபடுமாறு, ஜனாதிபதி ஜேக்கப் ஷுமா வலியுறுத்தியுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, கட்சி உறுப்பினர்களுக்கு அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ஏ.என்.சி.) எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், இது தொடர்பாக மக்கள் கவலையில் உள்ளதாகவும், அவர் எச்சரித்துள்ளார்.

இதுவரைகாலமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்துவந்த ஜனாதிபதி ஷுமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நிலையிலேயே, அக்கட்சிக்குப் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு புதிய தலைவர் தெரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிலையில், தலைவர் பதவிக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் முக்கிய வேட்பாளர்களாகக் காணப்படும் தற்போதைய துணை ஜனாதிபதி சிரில் ராமபோசா, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி ஷுமாவின் முன்னாள் மனைவியுமான நொக்காசன டலாமினி ஷுமா ஆகியோர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதில் வெற்றியடைபவர், ஷுமாவுக்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகலாமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களின் கசப்பான தலைமைத்துவப் போரால், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடையலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும்வரை, ஜனாதிபதியாக ஷுமா பதவி வகிக்கமுடியும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஷுமா ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகின்றார். இருப்பினும், அந்நாட்டில் ஐந்தாண்டுகளைக் கொண்ட ஜனாதிபதிப் பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg