ஆர்.கே.நகர்.தேர்தலில் முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஆர்.கே.நகர் தேர்தலை முன்னிட்டு ஒரே நாளில் நூறுகோடி ரூபாய் பணமுறைகேடு இடம்பெற்றுள்ளதாக, தி.மு.க.
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் அதிகாரியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து முறைப்பாடு தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த ஸ்டாலின்,
“தேர்தலை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) மட்டும் ஆளும் கட்சியினர் மற்றும் தினகரன் கட்சியினர் 100 கோடி ரூபாவை செலவு செய்துள்ளனர். இதன் போது வாக்காளர் ஒருவருக்கு 6000ரூபா பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணமுறைகேடு முதல்வர் எடப்பாடி அரசின் பதவியில் உள்ளவர்களால்தான் வழிநடத்தப்படுகிறது. இந்த அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது.
இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பில் இன்று 11க்கு மேற்பட்ட முறைப்பாடுகளை நாங்கள் தேர்தல் ஆணையகத்தில் தாக்கல் செய்துள்ளோம்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தி.மு.க.வினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றதே என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின்,
“நாங்கள் ஆதாரங்களைத் திரட்டி தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.அவ்வாறு எம் மீதும் முறைப்பாடுகள் இருப்பின் ஆதாரத்துடன் முறைப்பாட்டைத் தாக்கல் செய்யுங்கள்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.