யாழ். மாநகர மேயர் பதவி: பொது அணியின் வேட்பாளராக வித்தியாதரன்?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் போட்டியிட முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொது அணியொன்றை களமிறக்கி, அதனூடாக வித்தியாதரனை போட்டியிட வைக்கும் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக அமைப்புக்கள், சில தமிழ் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த பொது அணி உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஆதரவை திரட்டும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும், குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அறியமுடிகின்றது.
அத்தோடு, இந்து அமைப்பான சிவசேனை, இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சி சார்பாக வித்தியாதரனை மேயர் வேட்பாளராக களமிறக்க பேச்சுக்கள் இடம்பெற்று வந்த நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் தமிழரசுக் கட்சியின் மேயர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, பொது அணிகள் சார்பில் வித்தியாதரனை களமிறக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக நாம் ஊடகவியலாளர் வித்தியாதரனை தொடர்புகொண்டு வினவியபோது, தற்போதைய நிலையில் எதனையும் கூறமுடியாதென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.