Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சித் தேர்தல் தமிழர்களுக்கு புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பா?

In இன்றைய பார்வை
Updated: 14:29 GMT, Dec 20, 2017 | Published: 14:29 GMT, Dec 20, 2017 |
0 Comments
1431
This post was written by : Vithushagan

உள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தந்தோரோபாயங்கள் இம்முறை வெற்றிபெருமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒரு உடன்பாடு பேணிப்பாதுகாக்கப்படாவிட்டால் பிறகு நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதைப்போல கூட்டமைப்பைப்பற்றி கட்டியெழுப்பப்பட்டிருக்கும் மாயை திசைக்கொன்றாக போய்விடும் என்பதை பல தடவைகள் இந்த பத்தி எழுத்தாளர் எச்சரித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று தலைமை தாங்குவோர் கூட்டமைப்பின் கனதியை தாங்கிப்பிடிக்கக் கூடியவர்களாக இல்லை என்பதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதை மறந்து தான்றோன்றித் தனமாகச் செயற்படுகின்றது என்ற எண்ணமும் தமிழ் மக்களுக்கு ஏற்படுமாக இருந்தால் கூட்டமைப்பை நம்பி தமிழ் மக்கள் பின்தொடர மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.

இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அமெரிக்காவின் டொலரும், பிரதமரின் வழிகாட்டலும் பின்னணியாக இருந்து கூட்டமைப்பை வழி நடத்திச் செல்ல உதவும் என்று கருதுவதும், அந்த மனோநிலையோடு செயற்படுவதும் கூட்டமைப்பை உடைக்கவும், மக்கள் மனதில் கூட்டமைப்பு மீதான தீராத கோபத்தையுமே தோற்றுவிக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்தி நாளாந்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டமைப்பிலுள்ள எவரும் நிலையான கருத்தைக் கூறுவதாக இல்லை. சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தம் இல்லாதவர்களாகவே ஒவ்வொருவரும் இருப்பது அம்பலமாகியுள்ளது.

முதலில் கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி விமர்சித்தவர்கள் இப்போது ஜனநாயகம் என்பது மக்களுக்கு கிடைக்கவேண்டும். ஜனநாயகத்தை மக்கள் அனுபவிக்க முடியாதபடி அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்போக்கோடு செயற்படுகின்றது என்கின்றார்கள்.

பதவிகளுக்காகவும், ஆசனப்பங்கீட்டுக்காகவும் நாம் கூட்டுச் சேரவில்லை. ஒரு கொள்கை அடிப்படையிலேயே கூட்டுச் சேர்ந்திருக்கின்றோம் என்று கூறியவர்களோ, எல்லாம் புகுந்துவிட்டது வால் மட்டும் போகவில்லை என்பதுபோல், எல்லாம் சரி, வவுனியாவல் மட்டும் ஆசனப்பங்கீடு இன்னும் இணக்கத்திற்கு வரவில்லை என்று கூறுகின்றார்கள்.

வடக்கு கிழக்கில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளை கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தமக்கிடையே பங்கிட்டுக்கொண்டு தேர்தலைச் சந்திக்கச் செல்வதால் மூன்று கட்சிகளும் தமக்குள்ளேயே ஒருவரைப் பற்றி மற்றவர் குறைகளைக் கூறுவதையும், கட்சியாக தாங்கள் பலம் பெறுவதற்கு கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதையும் கண்டு மக்கள் விசனித்துப்போய் இருக்கின்றார்கள்.

உதாரணமாக தமிழரசுக் கட்சி தனியாக போட்டியிடும் பிரதேசத்தில், புளொட்டையும், ரெலோவையும் அவர்கள் ஆயுதக்குழுக்கள் என்றும், அவர்களோடு சேர்ந்து நீண்டகாலத்திற்கு பயணிக்க முடியாது என்றும் கூறுவதும், புளொட் மற்றும் ரெலோ இயக்கங்கள் போட்டியிடும் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி அரசியல் தீர்வு விடயத்தில் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும், கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் தீர்மானங்களுக்கும், இணக்க அரசியலுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளுக்கும் இல்லை என்றும் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.

ஆனால் இந்த மூவரும் தாம் கொள்கையின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படப்போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் இவர்களை யாரை ஏமாற்றப்பர்க்கின்றார்கள் என்பதை மக்களால் யூகிக்க முடியவில்லை.

எதுவாக இருந்தாலும் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தற்போதைய உள்ளடக்கம் வெறும் கோதாக இருந்தாலும் அது உடையாமலும், பலமாகவும், தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாமலும் இருக்க வேண்டும்.

ஏன் என்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டம்தான் முடிவுக்கு வந்ததே தவிர, தமிழ் மக்கள் எதற்காக போராடினார்களோ அந்த அடிப்படைக் காரணங்கள் இன்னும் தீர்வில்லாத பிரச்சினையாகவே இருக்கின்றன. அதற்கு தீர்வைக்காணும், நேர்மையையோ, அக்கறையையோ தற்போதுவரை சிங்கள அரசுகளிடம் காணமுடியவில்லை.

புதிய அரசியலமைப்பு வரைபு என்பதும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. இருந்த போதும் அறைகுiறாயான அந்தத் தீர்வு வரைபைக்கூட சட்டமாக்கும் விருப்பம் இந்த ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு வரைபை தமிழ் மக்கள் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் புதிய அரசியலமைப்பை  கூட்டமைப்பின் தற்போதைய தலைமைகள் என்போர் ஆதரிக்கின்றனர். இந்த நிலையில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் பெரும்பான்மை வெற்றியைக் கொடுப்பார்களேயாளனால் அது புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தப்படுத்த முடியும் என்று கூட்டமைப்பு தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருக்கும் நம்பிக்கை தமிழ் மக்களால் தோற்கடிக்கப்படலாம்.

அறைகுறையான புதிய அரசியல் அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை உலகறியச் செய்வதற்காக, உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் வெற்றியை வழங்க மாட்டார்கள்.

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு எதிராக வழங்கப்போகும் தீர்ப்பானது, கூட்டமைப்புக்குள் தன்னிச்சையாகச் செயற்படும் தமிழரசுக் கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும் என்று புளொட்டும், ரெலோவும் கருதுவதால் அவர்கள் இப்போதே தம்மைப்பாதுகாக்கும் செயற்பாட்டில் தீவிரம்காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழரசுக்கட்சி இந்த ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுப்போடும், பொது உடன்பாட்டுடனும் செயற்படுவதற்கான காலம் இன்னும் இருக்கின்றது. அவ்வாறு தமிழரசுக்கட்சி முன்னுதாரனமாகச் செயற்படுமாக இருந்தால் தமிழ் மக்களிடம் இழந்து போயிருக்கும் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலபடுத்துவதற்கான விருப்பத்துடன் ஆனால் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் மனச்சோர்வடைந்துள்ள புத்திஜீவகளுக்கும் அத்தகைய மாற்றமானது புதிய உற்சாகத்தையும் கொடுக்கும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஒரு மாதத்திற்கு பிரசார நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிரமாக இருப்பார்கள். அந்தப் பிரச்சாரங்களில் ஒருவர் மீது ஒருவர் சேறுபூசுவார்கள் அவ்வாறு நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமாக இருந்தால் தேர்தலுக்குப் பிறகு கூட்டமைப்பை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் பலனிக்காமல் போகும். எனவே இப்போதே ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் மீண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தையும் இணைத்துக்கொள்ளவதையும் விட்டுக்கொடுப்புக்களுடன் பரிசீலிப்பது நல்லது.

இது தவிரவும், கூட்டமைப்போடு இணைந்து தேர்தல் களத்தில் இறங்குவதற்கு தயாராகிய முன்னாள் விடுதலைப் புலிகளையும் இணைத்துக்கொள்வது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க உதவும்.

இத்தனை காரியங்களை மூத்த அனுபவத்துடனும், பக்குவத்துடனும் முன்னின்று செய்யவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏன் இத்தனை மௌனமாக இருக்கின்றார் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதே மௌனத்தைத்தான் புலிகள் அழிவை நோக்கித் தள்ளப்படும் இறுதி யுத்ததத்தின்போதும் சம்மந்தன் கொண்டிருந்தார்.

இப்போது கூட்டமைப்பும் ஒரு ஆபத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இதிலிருந்து கூட்டமைப்பை மீட்பதில் சம்மந்தன் தனது கடமைப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். கூட்டமைப்பு மூன்று அணியாகியுள்ள நிலையில், இப்போது தமிழரசுக் கட்சிக்குள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனுக்கு ஆதரவான அணியும், மாவை சேனாதிராசாவுக்கு ஆதரவான அணியும் தமக்கிடையேயான போட்டியை தொடங்கியிருக்கின்றார்கள்.

இந்தப் போட்டித் தன்மையும் கட்சியைப் பாதிக்கும் என்று கருதாமல் தலைமைகள் மௌனமாக இருந்ததாலேயே, தமிழரசுக் கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர்களான அருந்தவபாலனும், சயந்தனும் தெருவில் நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் இந்தத் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

-ஈழத்துக் கதிரவன்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg