Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிக்காக கட்சிகளும்: அதிருப்தியோடு மக்களும்!

In இன்றைய பார்வை
Updated: 05:04 GMT, Dec 26, 2017 | Published: 13:40 GMT, Dec 25, 2017 |
0 Comments
1333
This post was written by : Surenth

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை தேர்தலை விரும்பாதவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போது புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றார்.

தேர்தலில் சக கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஆசனப்பங்கீடுகளைப் பகிர்ந்து கொள்வதில் ரணில் விட்டுக்கொடுப்புடன் இருந்தபோதும், ரவிகருணாநாயக்க,கபிர் ஹாசிம்,கரு ஜெயசூரிய போன்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்ற மனோநிலையிலேயே விவாதங்களில் ஈடுபட்டனர்.

தேர்தல் தொடர்பாக இறுதி அறிவிப்பு வரும் வரை சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் முயற்சியாக முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் ஜனாதிபதியும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் இருந்தது. அப்படி ஒரு திட்டத்தில் இரு தரப்பையும் இணைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரக் கட்சியின் பெயரால் இவர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பற்கான சில காய் நகர்த்தல்களை செய்ய வேண்டிய தேவைரணில் விக்கரமசிங்கவுக்கு இருந்தது. மஹிந்த ராஜபக்ச வழமை போல் கூட்டு எதிரணினரின் ஆலோசனைகளை புறம் தள்ளிவிட்டு தனது தம்பியாரான பசில் ராஜபக்சவினதும் ,அவரோடு செயற்படும் சிலரினதும் ஆலோசனைக்கு எடுபட்டு, ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை முன்வைத்து மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்வதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டுள்ளார்.

அதேபோல் மைத்திரிபால சிறிசேனவின் அணியில் இருக்கும் அனுபவமில்லாத சிலர் குறிப்பாக அமைச்சர்களான மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க போன்றவர்களை உள்ளடக்கியவர்கள் மஹிந்த அணியோடு சேர்ந்துவிட்டால் தற்போது தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முக்கியத்துவத்தைதாம் இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை.

இதற்கிடையே பசில் ராஜபக்சவின் தலையீடுகளால் கூட்டு எதிரணியில் உள்ளபங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் வாக்குகள் இரண்டாக உடைந்து போயுள்ள நிலைமையும், கூட்டு எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதமாக அமைந்துள்ளதாகக் கருதலாம்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி எனும் குற்றச்சாட்டும், அதில் குற்றவாளிகளாக ஐக்கிய தேசயக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விசாரணைகளை எதிர் கொண்டிருப்பதும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மஹிந்த ஆட்சியில் மோசடியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கப்போவதாகக் கூறி ஆட்சிக்கவந்தவர்களே மோசடியாளர்களாகி மக்களை ஏமாற்றி விட்டார்களே என்ற ஆதங்கம் மேலோங்கியுள்ளது.

அது தவிரவும், நல்லாட்சி என்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் கடந்த மூன்று வருடங்களாக எதையும் ஆக்கபூர்வமாகச் செய்துமுடிக்கவில்லை. நாடுபெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளது. அதிலிருந்து நாட்டை மீட்பதற்கு திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் நாட்டை அடகு வைத்து ஆட்சி நடத்தும் நோக்கத்துடன், மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கும், காலிமுகத்திடலை சீனாவுக்கும், சம்பூரை இந்தியாவுக்கும், என்று ஒப்பந்தங்கள் எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதனால் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ள நிலையில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,மைத்திரிபால சிறிசேன தலமையிலான சுதந்திரக் கட்சிக்கும் எந்தளவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதுகேள்விக்குறிதான்.

நல்லாட்சியை ஏற்படுத்திய மக்களே நல்லாட்சியாளர்களின் செயற்திறனற்ற போக்குக் குறித்து அதிருப்தியடைந்திருக்கின்றார்கள் என்பதால் பெரும்பான்மையான மக்கள் தமக்குவாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மஹிந்த ராஜபக்ச பழையபாணியில் ஏறுகின்ற மேடைகளிலெல்லாம் இரண்டு கைகளையும் உயர்ந்த்திக்காட்சி அசைத்தபடிவலம் வருகின்றார்.

தென் இலங்கை பிரதான கட்சிகளின் நிலைப்பாடு இதுவாக இருக்கின்ற நிலையில், ஜே.வி.பியினர் அதேபழையபாணியில் ஆட்சியாளர்களை விமர்சித்துக்கொண்டு, கிராமங்களை முன்னேற்றுவோம் என்ற தொனிப்பொருளில் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜே.வி.பியினருக்கு முன்னைய ஆட்சியாளர்கள் தவறு செய்தாலும், தற்போதைய ஆட்சியாளர்கள் தவறு செய்தாலும் அதை அரசியல் ரீதியாக எதிர்ப்பதை தமது பாணியாக கடைப்பிடித்து வருகின்றார்களே தவிர, மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசியலை நடத்துவதற்கு முன்வர மறுக்கின்றார்கள்.

ஜே.வி.பியைப் பொறுத்தவரை 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், சுதந்திரக் கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு,பிரதான சக்தியாக திகழ வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

அதற்கான அத்திவாரத்தை பலமாக இடுவதற்கு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்படுகின்றனர். வட்டார முறைமையில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதும், மிகக் குறைவான வாக்குகளில் ஒருவர் வெற்றிபெற இருக்கும் வாய்ப்பும், கிராமங்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டுவரும் தமக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று ஜே.வி.பி நம்புகின்றது.

இந்தத் தேர்தல் முறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமான ஒன்றாக கூறப்பட்டுள்ளதாலும், அதில் குறைபாடுகள் காணப்பட்டால் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் அபாயம் இருந்ததாலும், பெண் வேட்பாளர்களை அணி திரட்டிக்கொள்வதில் பிரதான கட்சிகளைப் போல் ஜே.வி.பியும் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

இந்த உள்ளூராட்சித் தேர்தலில் சில கட்சிகள் கூட்டாக சேர்ந்து தேர்தல் கேட்பதையும். தனியா நின்று தேர்தல் கேட்பதையும் பார்த்து மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தனித்து தேர்தலை சந்தித்து வரும் ஓரிருகட்சிகள் தவிர பெரும்பாலான கட்சிகள் கூட்டாகவும், தனித்தும் போட்டியிடுவது ஏற்கனவே அவர்களுக்கிடையே இணங்கிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் தான் என்பதை தெரிந்திருப்பது நல்லது.

இந்தத் தேர்தல் முறைமையில் கூட்டமைத்து தேர்தல் கேட்பதும், தனித்துக் கேட்பதும் ஒரே மாதிரியான முடிவை தரும் என்பதால் தனித்து தேர்தல் கேட்பது மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கே தவிர, தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைப்பதற்காக கூட்டமைத்தக் கொள்னலாம் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அவ்வாறான தேர்தல் வியூகங்களை இந்தக் கட்சிகள் வகுத்துள்ளன.

முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளின் தேர்தல் தந்திரோபாயங்கள் தொடர்பாக ஏற்கனவே இப்பந்தியில் அலசப்பட்டதால் அது பற்றி மீண்டும் அசைபோடத் தேவையில்லை. எது எவ்வாறாக இருந்தாலும் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தெளிவற்றதும், எதிர்பார்ப்புக்குமாறானதுமான தீர்ப்பையே மக்கள் வழங்குவார்கள் என்பதும்,பெரும்பாலான மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்வதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இரப்பார்கள் என்பதும் திண்ணம்.

கடந்த காலத் தேர்தல்களில் மக்கள் அக்கறையற்று இருந்தாலும், இறுதி நேரத்தில் மக்களை வாக்களிக்கச் செய்யும் அலை ஒன்றை உருவாக்கியது போல், இந்தத் தேர்தலிலும் இறுதி நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு மாயை அலையை உருவாக்கி மக்களை வாக்களிக்கச் செய்யலாம் என்ற கட்சிகளின் திட்டம் இம்முறை நிறைவேறாது.

ஈழத்துக் கதிரவன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg