பிரபலங்களின் கால்களில் விழாதீர்கள்: ரசிகர்களிடம் ரஜினிகாந்த்

தனது கால்களில் விழுந்து வணங்க வேண்டாம் எனவும் தாய், தந்தை, கடவுளின் கால்களில் மாத்திரமே விழுந்து வணங்க வேண்டுமெனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கள் ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ளும் ரஜினிகாந்த் இன்றைய ஆரம்ப உரையின் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
“பணம், புகழ் உள்ளவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்க வேண்டிய தேவை இல்லை. எனவே நான் ரசிகர்களிடம் மறுபடியும் கேட்டுக்கொள்வது எனது கால்களில் விழுந்து வணங்காதீர்கள் என்பதையே.
மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்திருந்த போது எனது நட்சத்திரம் என்னவென்று அர்ச்சகர் கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம் என எதுவுமே தெரியாது. ஆகையால் அதுபற்றி தெரியாதென குறிப்பிட்டேன்.
அப்போது எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள் என்றார். எனக்கு பெருமாள் நட்சத்திரம் என்று இப்பொழுதுதான் தெரியும்.
உங்கள் உட்சாகத்தையும் உணர்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் உங்கள் வயதில் இருந்த போது இவ்வாறு தான் இருந்தேன். ரான் பெங்களூரில் இருந்த போது ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தேன். கர்நாடகாவை பொறுத்தவரை சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். சேர்ந்த கலவைதான் ராஜ்குமார்” என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தனது ரசிகர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.