கனடாவின் பல பகுதிகளுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை

கனடாவின் பல பகுதிகளுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை நேற்று (சனிக்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃபிரேசர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தகவலின் படி பிரிட்டிஷ் கொலம்பியாவின் அப்போட்ஸ்ஃபோர்ட் மற்றும் மிஸன் பகுதிகளில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு பனிப்புயல்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்துள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையில் இருந்து ஒரு லட்சத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றித்தவிப்பதாகவும், நேற்று பிற்பகல் வரை 26 ஆயிரம் பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முறிந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், அவற்றை மூடி பெருமளவு பனி படர்ந்துள்ளதால், அதன் பாரம் அதிகரித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் சிக்கலடைந்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.