இளைஞர்களிடத்தில் தொழில்நுட்ப மோகத்தை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர்

இளைஞர்களிடத்தில் தொழில்நுட்ட அறிவியல் தொடர்பான மோகத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று (திங்கட்கிழமை) புதுவருடத்தன்று இடம்பெற்ற பேராசிரியர் சத்தியேந்திரநாத் போசின் 125ஆவது பிறந்தநாள் விழாவில், காணொளி மூலம் உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
“இளைஞர்களிடம் தொழில்நுட்ட அறிவியல் தொடர்பான ஈடுபாட்டை உண்டுபண்ண வேண்டும்.இதற்கு மொழி எந்த விதத்திலும் தடையாக இருக்க கூடாது. எனவே அனைத்து மாநிலங்களுக்கும் உரித்தான மொழிகளில் அறிவியல் தொடர்பான கல்வியை கொண்டு செல்வது அவசியம்.
தொழில்நுட்ப உருவாக்கத்தில் விஞ்ஞானிகளது சிந்தனை புதிய திசையை நோக்கி பயணிப்பதாக இருக்கவேண்டும். நமது அறிவியல் கண்டு பிடிப்புகளும், ஆராய்ச்சிகளில் கிடைக்கும் முடிவுகளும் நாட்டின் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் அமைதல் அவசியம்.
இதற்காகத்தான் மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி உள்ளது. அதில் சூரிய மின்சக்தி, பசுமை ஆற்றல், நீர்பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவை தனித்தனி அறிவியல் துறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் நாட்டின் போற்றுதலுக்கு உரியவர்கள். இந்த உலகத்தின் கவனத்தையே ஈர்க்கும் விதமாக இஸ்ரோ நிறுவனம் 100க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தி உள்ளது.” எனக் குறித்த உரையின் போது பிரதமர் நேரேந்திர மோடி அறிவியல் தொடர்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.