ட்ரம்ப்பின் கருத்துக்கு பாகிஸ்தான் பதில்

அமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையாக பல பில்லியன் டொலர்களை பாகிஸ்தான் பெற்றுள்ளபோதிலும், அமெரிக்காவுக்கு பொய் கூறி ஏமாற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.
அமெரிக்கா வழங்கிய உதவித்தொகை பற்றிய அனைத்து விவரங்களையும் பகிரங்கமாக அறிவிக்க பாகிஸ்தான் தயாராகவுள்ளதாக, ஜியோ தொலைக்காட்சிச் சேவையிடம் நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹவாஜா அசிஃப் தெரிவித்துள்ளார்.
‘இதற்கு மேல் நாம் எதுவும் செய்யமாட்டோமென்று அமெரிக்காவிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும், அவநம்பிக்கையையுமே அமெரிக்கா அளித்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், குர்ராம் டஸ்கிர் கான் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘அமைதி, ஒழுக்கம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றின் மீது பாகிஸ்தான் எந்தளவுக்கு முனைப்புடன் உள்ளதென்பதை வெளிக்காட்டவேண்டிய தருணம் இதுவாகும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையாக பல பில்லியன் டொலர்களை பாகிஸ்தான் பெற்றுள்ளபோதிலும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பொய் கூறி ஏமாற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவீட்டரில் செய்தியில் தெரிவித்திருந்தார்.
‘கடந்த 15 வருடங்களாக சுமார் 33 பில்லியன் டொலர் உதவித்தொகையை பாகிஸ்தானுக்கு முட்டாள்த்தனமாக அமெரிக்க வழங்கியிருந்தது. இதனால் எந்தவிதத் பயனுமில்லை.
ஆப்கானிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை நாம் ஒழிக்க முற்படும்போது, அப்பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை பாகிஸ்தான் வழங்கியுள்ளது’ எனவும் அவர் கூறியிருந்தார்.