கல்முனை மாநகர சபை மோசடியால் செயலிழந்துள்ளது: விஜித ஹேரத்

மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப் பணத்தைக்கொண்டு கல்முனை மாநகர சபை சிறந்த சேவையினை செய்யத்தவறியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளமையே அவர்களால் சேவை செய்ய முடியாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரசாரக் கருத்தரங்கில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களை ஆதரித்து அதன் வேட்பாளர் முகம்மட் சியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சந்தை வருமானம், வாகனத்தரிப்பிட வருமானம், குத்தகை வருமானம், பொலிஸாரின் தண்டப்பணம் மூலம் கிடைக்கும் வருமானம் எனப் பல வருமான மூலங்களினூடாக அதிகமான வருமானங்களை ஈட்டும் மாநகர சபையாக கல்முனை இருந்த போதிலும் அதற்கேற்ப மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை.
போடப்பட வேண்டிய வீதிகள் இன்னும் பல இருக்கின்றன. தெருவிளக்குகள் சீரில்லை. வடிகான்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இவைகளைப்பற்றிச் சிந்திக்காமல் கடந்த காலங்களை ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள்?
கல்முனை மாநகர சபையில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் தான் அவர்களால் சிறப்பான சேவையினைச் செய்ய முடியாமல் போயுள்ளது. திஸ்ஸமஹாராமவை எவ்வாறு இலங்கையின் முன்னணி உள்ளூராட்சி சபையாக மக்கள் விடுதலை முன்னணியால் மாற்றமுடிந்ததோ அவ்வாறே கல்முனையினையும் மாற்றுவோம்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதும் மிக அதிகளவில் பாதிப்புற்று மருதமுனைக் கிராமத்திற்கு வந்து களம் இறங்கியவர்கள் நாம். எம்மிடம் சாதி, இன பேதங்கள் இருக்கவில்லை. இப்பிரதேசத்தில் தற்காலிக வீடுகளை அமைத்து மக்களைக் குடியமர்த்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இவற்றையெல்லாம் தேர்தலுக்காக மேற்கொள்ளவில்லை. நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை. இம்மனிதாபிமானப் பணிகளை என்றும் செய்யக் காத்திருக்கின்றோம்.
இவைகளுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதல்ல எங்களது வேண்டுதல். இப்பிரதேசத்தை சுத்தமான, தூய்மையான அரசியல் கலாசாரமொன்றை நிலை நிறுத்தக் கூடிய இடமாக மாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் – என்றார்.