Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்

In இன்றைய பார்வை
Updated: 07:51 GMT, Jan 2, 2018 | Published: 07:42 GMT, Jan 2, 2018 |
0 Comments
1313
This post was written by : Varshini

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் 2018ஆம் ஆண்டு முதல் நாளான நேற்று சீனாவின் தேசியக் கொடி ஏற்பட்டுள்ளமை இலங்கையின் இறைமைக்கு வீழ்ந்த அடி என்ற பாங்கில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. வெறுமனே வேற்று நாட்டின் கொடி ஏற்றப்படுகின்றமையை வைத்து ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குட்படுத்திவிட முடியாது.

ஆனால் இலங்கையில் சீனாவின் வகிபாகத்தை உண்மையாக அறிந்திருப்பவர்கள் கொண்டிருக்கும் கரிசனையை பத்தோடு பதினொன்றாகப் புறந்தள்ளிவிடவும் முடியாது.

கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைவாக இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களின் மொத்த அளவு 64 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதாவது இலங்கை ரூபாவில் 960,000 கோடிகளாகும். அரசாங்கத்தின் அனைத்துவிதமான ஆண்டு வருமானத்தில் 94 சதவீதமானவை கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதில் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களின் தொகை மாத்திரம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அதாவது 120,000 கோடி ரூபாய். வட்டியோடு இந்த கடன் தவணைகளைத் திரும்பிச் செலுத்துவதற்கு திக்கித் திணறி நிற்கின்ற இலங்கை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தாரைவார்க்க நேர்ந்தது.

வர்த்தகத்தில் சாணக்கியமுடைய சீனா, இலங்கையின் கடன் சுமைகளை நன்கறிந்தும் கடன் வழங்கியமை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை தன்பால் கவர்ந்துகொள்ளும் கடன்பொறி இராஜதந்திரத்திற்கு அமைவாகவே என தற்போது உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

90களின் ஆரம்பப்பகுதியில் இருந்து அசுர பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்து வந்த சீனா இன்று உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு என்ற நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ளது. உலகின் தொழிற்சாலை என்ற அளவிற்கு உலகில் உற்பத்தியாகும் பெரும்பாலான பொருட்கள் சீனாவிலேயே தற்போது உற்பத்திசெய்யப்படுகின்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது.

தனது பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்து முதற்தரத்தை நோக்கிய வேகப் பாய்ச்சலை வியூகமாகக் கொண்டிருக்கும் சீனா, கடந்த 1500ஆம் ஆண்டுகளில் பட்டுப்போன ‘பட்டுப்பாதை’ வர்த்தகத்திற்கு மீண்டும் உயிரூட்ட ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. இதன்படி இலங்கையில் அம்பாந்தோட்டையில் மிகப்பெரிய துறைமுகத்தை நிர்மாணிக்க கடனுதவி வழங்கியது. ‘கடன்பட்டார் நெஞ்சம் போன்று கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற கம்பராமாயண கருத்துக்கமைவாக கடன்பட்டவர்களின் இக்கட்டான நிலையில் இன்றோ வேறு வழியின்றி சீனாவிற்கே அந்த துறைமுகத்தைக் கொடுக்க நேர்ந்துள்ளது.

குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனத்தின் கொடியை ஏற்றினால் போதும் தானே, ஏன் சீன நாட்டின் கொடியை ஏற்ற வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால் சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமாக இருந்தாலும் சரி சைனா ஹாபர் நிறுவனமாக இருந்தாலும் சரி அனைத்துமே சீன அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்பதை சீன அரசியல் பொருளாதாரத்தை அறிந்தவர்கள் நன்கறிவர்.

ஆகமொத்தம் சீனாவே இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. அடுத்துவரும் 99 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூறமுடியாது. ஹொங்கொங் தீவை பிரித்தானியா 1898ஆம் ஆண்டில் 99 வருட குத்தகைக்கு எடுத்த போது சீனா வறுமைக்கோட்டின் கீழுள்ள பலவீனமான நாடாக இருந்தது. சீனாவின் அசுர வளர்ச்சியும் பலமும் பிரித்தானியாவின் சரிவும் குத்தகைக் காலத்தின் நிறைவில் மீளக்கையளிப்பை உறுதிசெய்தது.

ஆனால் இன்னமும் 99 வருடங்களின் பின்னர் சீனாவின் பலம் மேலும் அதிகரித்து முதற்தர பொருளாதார வல்லரசாக மாறும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அம்பாந்தோட்டை துறைமுகம் மீளவும் இலங்கையின் கைகளுக்கு திரும்புமா இல்லையா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

2015ஆம் ஆண்டில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளுடனான உறவுகள் பலமடைந்தபோதும் இலங்கை எதிர்பார்த்த பொருளாதார பலாபலன்கள் கிடைக்கவில்லை. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைத்தன. வெறுமனே 300 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே 2016ஆம் ஆண்டில் கிடைத்திருந்தது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரம் கடும் நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளமையால் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்று அரச சொத்துக்கள் பலவும் சீனாவின் கைகளுக்கு செல்லும் சாத்தியக்கூறுகளை மறுதலிக்க முடியாது. அந்தவகையில் பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அரசியலிலும் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வலுப்பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg