Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதி மௌனிக்கப்பட்ட திருமலை படுகொலை!

In இலங்கை
Published: 08:35 GMT, Jan 2, 2018 |
0 Comments
1126
This post was written by : Varshini
justice

யுத்த காலத்தில் திருகோணமலையில் நிலைகொண்டிருந்த படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் ஆண்டுகள் 12.

கடந்த 2006ஆம் ஆண்டு இதே போன்ற ஒருநாள் மாலை வேளையில், 21 வயது நிரம்பிய மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமசந்திரா, லோஹிதராஜா ரோகன், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்கள் திருமலை நிலாவெளி கடற்கரையில் அமர்ந்திருந்தனர். க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்த இவர்கள், அடுத்து நடக்கவிருந்த ஆபத்தை கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

விசேட அதிரடிப்படையின் ஆக்கிரமிப்பில் அக்காலப்பகுதியில் திருகோணமலை காணப்பட்ட நிலையில், இந்த ஐந்து மாணவர்களையும் விசேட அதிரடிப்படையினரே சுட்டுக்கொன்றுள்ளனர். எனினும், அதிரடிப்படையினரை தாக்க வந்த காரணத்தினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என காரணம் கற்பித்த கடந்த மஹிந்த அரசாங்கம், அவர்களுக்கு புலி முத்திரை குத்தவும் தவறவில்லை.

மாணவர்கள் இவ்வாறு மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டமைக்கு எதிராக பல மனித நேய அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் கொடுத்த அழுத்தத்தின் பின்னரே, இச்சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 2013ஆம் ஆண்டு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக வலுவான சாட்சிகள் இல்லையென வழமைபோன்று விடுவிக்கப்பட்டனர்.

பிள்ளைகளை பறிகொடுத்து நீதியும் கிடைக்காத நிலையில், அந்த ஐந்து மாணவர்களினது பெற்றோரும் நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர். என்றோ ஒருநாள் தமக்கு நீதி கிடைக்குமென மாணவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்ற நிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பின் இரு முக்கிய சாட்சிகள் வெளிநாடுகளில் உள்ள நிலையில், தூதரகங்களின் வாயிலாக அவர்களை தொடர்புகொண்டு விபரங்களை பெறுமாறு கடந்த நீதிமன்ற விசாரணைகளின் போது திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

நீதிக்காக காத்திருந்த இம்மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இம்மாணவர்களுக்காக சாட்சி கூற சாட்சியாளர்கள் முன்வருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg