Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமஷ்டியை த.தே.கூட்டமைப்பு கைவிடாது: துரைராஜசிங்கம்

In
Updated: 09:30 GMT, Jan 2, 2018 | Published: 09:30 GMT, Jan 2, 2018 |
0 Comments
1241
This post was written by : Varothayan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி கட்டமைப்பு என்ற ஒரு அதிகார வடிவத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. சமஷ்டி கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானதொன்று என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது நேற்று (திங்கட்கிழமை) நற்பிட்டிமுனை சுமங்களி திருமண மண்டபத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய துரைராஜசிங்கம் மேலும் தெரிவிக்கையில், எமது போராட்டங்கள் உரிமைக்கோரிக்கைள் என்பனவற்றின் இன்னுமொரு கட்டமாக உரிமைகளை வென்றெடுத்து அந்த உரிமைகளை அதி உச்ச ஆவணம் என்று சொல்லப்படுகின்ற அரசியல் அமைப்புச்சட்டத்திலே பதித்துக்கொள்ளுகின்ற விடயத்திலே நாங்கள் நிற்கின்றோம்

எனவே தான் நாங்கள் அனைவரும் மிகவும் புத்திபூர்வமாகவும், நுணுக்கமாகவும், அவதானமாகவும், நடந்து கொண்டு இந்த அதிகாரங்களை எங்களது அரசியல் அமைப்புச்சட்டத்திலே பதிவு செய்வதென்பது மிக முக்கியமானதொன்றாகும்.

எங்களுக்கு எதிரும் புதிருமாக எப்பொழுதும் வன்மமாக அடக்கி ஆண்டுகொண்டிருந்த அதிகாரத்தோடு சமமாக நின்று அவர்களை இணங்கச்செய்து அந்த இணக்கத்தின் அடிப்படையிலே எங்களுடைய உரிமைக்கோரிக்கைகளை பொறிக்கின்ற இந்த கடுமையான கைங்கரியத்தை செய்கின்றபோது பல விடயங்களை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்துக்கொள்ள முடியாது.

காரணம் இந்த நாட்டை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுகின்றது என்ற செய்தி சிங்களவாதிகளால் தேர்தல் களத்தில் வாக்குகளை பெறுவதற்கான முதற்படியாக அல்லது மூலதனமாக பாவித்துக்கொண்டுவந்த நிலமை இருக்கின்றது.

புதிய அரசியல் திட்ட வரைபை பொறுத்தவரையில் நிதானமாக சிந்தித்து இரண்டு பக்க மக்களின் மனங்களையும் பாதிக்காத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது. எனவே தான் எமது பகுதியில் தங்களை புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என்று கூறுவோர், த.தே.கூட்டமைப்பு தன்னுடைய இலக்கில் இருந்து விடுபட்டுச்செல்கின்றது என்றும் அரசியல் அமைப்பு விடயத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கோரிக்கைகளான சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு, பகிரப்பட்ட இறையாண்மை போன்றவற்றை விட்டுக்கொடுத்து விட்டார்கள் எனவும் பிரசாரம் செய்ய முற்படுகின்றார்கள்.

த.தே.கூட்டமைப்பை விசுவாசமாக பின்பற்றுகின்ற தொண்டர்களை பொறுத்தவரையில் அவர்கள் விசுவாசிகளாக இருந்துகொண்டும் கூட அவர்கள் பேசுவதனை நம்பிக்கொண்டு எங்களுக்குள்ளே இருந்து கேள்விகளை கேட்டு குழப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தற்போதைய இடைக்கால அறிக்கை தொடர்பாக பலர் பலவிதமான குழப்பங்களை செய்து வருகின்றார்கள். அதாவது இந்த இடைக்கால அறிக்கையில் சட்டம் ஒழுங்கு பற்றி கூறப்படவில்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு குழுவிற்கு தலைவர் சம்பந்தனும் ஒரு உறுப்பினராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த அரசியல் அமைப்பு தொடர்பாக பெரும்பான்மை கட்சிகளால் காலாகாலமாக ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம். அதன்காரணமாக தற்போதும் ஒரு முறை ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற பயம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் என்பது இதற்கு முன்பு நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்டங்களை விட தமிழர்களை பொறுத்தவரையில் வித்தியாசமானது- எனக் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg