ஆட்டம் காணப்போகும் அரசியல்? – முடிவுக்காக நகரும் நொடிகளில் பரபரப்படையும் தென்னிலங்கை!

ஊழல், பாரிய மோசடி, அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில், 1135 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் பி.பத்மன் சூரசேனவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் மத்தியவங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் விவகாரம் தொடர்பாக நாளை சிறப்பு அறிவிப்பினை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது தொடர்பாக தென்னிலங்கையில் பலதரப்பட்ட வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்பிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்து மத்திய வங்கி ஊழல் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்ததோடு, ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய அரசியல் புள்ளிகளும் இதில் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சுமத்திவந்தது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் முறையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் 32 உறுப்பினர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது நம்பிக்கையில்லா பிரேரணையினை முன்வைத்தனர்.
இந்த விடயத்தில் ரவிகருணாநாயக்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.
தொடர்ந்தும் சூடுபிடித்துவந்த மத்திய வங்கி ஊழல் தொடர்பாக பிரதமர் உட்பட பல அரசியல் முக்கியஸ்தர்களிடமும் விசாரணைகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு அதன் இறுதி அறிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தற்போது பதவியில் உள்ள அரசியல் பிரமுகர்களும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி வெளியிடவுள்ள சிறப்பு அறிவித்தலால் நடக்கப்போவது என்ன?
இதனால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் நிகழுமா? கைது உத்தரவுகள் அல்லது பதவி பறிப்புகள் இடம்பெறுமா என்ற கேள்விகள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் பிரிவிற்கு இந்த அறிக்கையும், ஜனாதிபதி வெளியிடவுள்ள அறிவித்தலும் காரணமாக அமையும் என கூட்டு எதிர்கட்சி சார்ந்த பிரமுகர்கள் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.