Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சருடனான சந்திப்பு வெற்றி! – வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 03:36 GMT, Jan 3, 2018 | Published: 03:36 GMT, Jan 3, 2018 |
0 Comments
1443
This post was written by : Varshini

வடக்கு மாகாண போக்குவரத்து சேவையில் காணப்பட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதோடு, இன்று பிற்பகல் 2 மணியுடன் சேவைக்கு திரும்புவதாக அரச போக்குவரத்து பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் விசேட குழுவினருக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அரச பணியாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சேவையை ஆரம்பிக்க வேண்டுமென முதலமைச்சர் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் வடக்கு மாகாணத்தின் சகல அரச பேரூந்து பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக கொழும்பில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றதோடு, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் குழுவினர் முதலமைச்சரை சந்தித்தனர்.

இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதோடு, வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே காணப்பட்ட 40இற்கு 60 என்ற விகிதாசார அடிப்படையில் சேவையில் ஈடுபட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவையாளர்கள் இணங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தூர இடங்களிலிருந்து பிரயாணங்களை மேற்கொள்ளும் பேரூந்துகள், வவுனியா பேரூந்து நிலையத்தில் நிறுத்தாமல் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

வடக்கில் பேரூந்து சேவை தொடர்ந்தும் முடக்கம்: ஆராய வருகிறது விசேட குழு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலையில், போக்குவரத்துச்சபை தலைமைக் காரியாலயத்திலிருந்து வவுனியாவிற்கு இன்று (புதன்கிழமை) விசேட குழுவொன்று செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தை பார்வையிடவுள்ள குறித்த குழுவினர், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தை மூடி புதிய பேரூந்து நிலையத்திற்கு அரச மற்றும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுமாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். இதற்கு, இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, வடக்கின் ஏனைய மாவட்ட அரச போக்குவரத்து பணியாளர்களையும் இணைத்துக்கொண்டு கடந்த இரண்டு தினங்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்துச் சபை தலைமை காரியாலய பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்துச் சபை சங்கங்களின் இணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தே, இன்றைய தினம் வவுனியாவுக்கு சிறப்பு பிரதிநிதிகள் குழுவொன்று செல்லவுள்ளது.

அரச போக்குவரத்து முடங்கியுள்ளதால் இலங்கை போக்குவரத்து சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் உரிய தீர்வுகள் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg