முத்தலாக் தடைச் சட்டமூலம் மாநிலங்களவையில் இன்று சமர்ப்பிப்பு

முத்தலாக் விவாகரத்து தடைச் சட்டமூலம் இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் சமர்பிக்கப்படுகின்றது.
முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் ஆண்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்க வழிசெய்யும் முத்தலாக் தடைச்சட்டமூலம் கடந்த வாரம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மாநிலங்களைவயில் சமர்பிக்கப்படவுள்ளது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் சட்டமூலத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் சட்டமூலத்தில் திருத்தங்களை வலியுறுத்த வேண்டாம் என்று காங்கிரஸூக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “முத்தலாக் சட்டமூலம் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகின்றது. சட்ட மூலம் சுமூகமாக நிறைவேறும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.