சீனாவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இம்மாதம் விஜயம்!
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இம்மாதம்; 8ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பீஜிங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சு இதனைக் கூறியுள்ளது.
இது தொடர்பாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்தபோது, ‘சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பையேற்று, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இம்மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் பரஸ்பர அரசியல் விவகாரம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு கட்டியெழுப்பப்படுமென்று நாம் நம்புகின்றோம். அத்துடன், இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பைப் பேணுதல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கவனஞ்செலுத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.
‘கடந்த 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதியாக மக்ரோன் பதவியேற்றதைத் தொடர்ந்து, சீனாவுக்கு முதற்தடவையாக இம்மாதம் 8ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளார்’ எனவும் அவ்வமைச்சு மேலும் கூறியுள்ளது.