Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கலாம்?

In இன்றைய பார்வை
Updated: 06:55 GMT, Jan 3, 2018 | Published: 06:55 GMT, Jan 3, 2018 |
0 Comments
1411
This post was written by : srikkanth

அனைவருக்கும் பிறந்திருக்கும் 2018 ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்த வருடம் எதிர்பார்ப்புகளாகவும், நம்பிக்கைகளாகவும் இருந்த அதே விடயங்களை மிச்சமாகக் கொண்டே புதிய வருடமும் பிறந்திருக்கின்றது.

இந்த வருடத்தின் முதல் நாளிலேயே மத்திய வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகின்றது.

பிரதமரோ மத்திய வங்கி மோசடி தொடர்பான அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாருடைய தலை உருளுமோ என்ற கவலையோடு மிகவும் அடக்கமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்.

தமிழர் தரப்பில் பழைய பல்லவியான சர்வதேசக் கதையை மீண்டும் தூசு தட்டி கூறத் தொடங்கியுள்ளனர். திருகோணமலையில் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ‘முன்னர் கிடைக்கப்பெற்ற சர்வதேச தலையீட்டுக்கான வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோம். தற்போது மீண்டும் சர்வதேசத்துடன் ஏற்பட்டுள்ள உறவுகளை பயன்படுத்திக்கொள்வதிலிருந்து நாம் தவறவிடக்கூடாது’ என்று மிகவும் உணர்ச்சிவசத்தோடு தெரிவித்துள்ளார்.

அதேபோல் அம்பாறையில் வேட்பாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் உண்மை தெரியவரும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற ஆசனங்களை வெற்றிபெற்றபோதும், மாகாணசபையில் பெரும்பான்மையான வெற்றிகளைப் பெற்றுக்கொண்டபோதும் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வாக்களித்த தமிழ் மக்களுக்கு எதையும் செய்யாத தமிழ் தலைமைகள் உள்ளுராட்சியில் சபையை பயன்படுத்தி காரியங்களை சாதிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

தமிழ்மக்களின் இவ்வாறான கேள்விகளுக்கு தமிழ் தலைமைகள் பதிலளிக்க வேண்டும், உத்தரவாதத்தைத் தரவேண்டும் என்பதே மக்களின் கேள்வியாக இருக்கையில், அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், சுற்றிவளைத்து வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் மக்களை திருப்திப்படுத்த போதுமானதாக இருக்காது.

தென் இலங்கை அரசியலில் இந்த புத்தாண்டில் சில புதிய நகர்வுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்குக் காரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சியினரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி அரசுக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளமையாகும்.

மீண்டும் நல்லாட்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்வமாக இருக்கின்றபோதும், ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தத்தை அவசரமாக புதுப்பித்துக்கொள்வதில் ஆர்வமாக இல்லை.

சுதந்திரக் கட்சியைப்பொறுத்தவரை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வெற்றி பிரகாசமானதாக அமையும் என்றும், அந்த வெற்றியோடு, ஆட்சிமாற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்றும் எதிர்பார்;பபது போன்று தெரிகின்றது.

ஏவ்வாறிருப்பினும், தேர்தல் முடியும்வரை இந்த ஒப்பந்தம் தொடர்பில் யாரும் கதைக்க வேண்டாம் என்று சுதந்திரக் கட்சினருக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறததில் தேர்தல் அறிவிக்கப்படும்வரை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரின் செயற்பாடுகளில் காணப்பட்ட எழுச்சியும், எதிர்பார்ப்புகளும் தேர்தலுக்கான வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

பொது எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள பங்காளிகளுக்கிடையிலான மோதல்களும், முரண்பாடுகளும் பொது எதிரணியின் செயற்பாடுகளை வலிமை இழக்கச் செய்துள்ளன. பொது எதிரணியினரின் வேட்புமனுக்கல் பல மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டதானது அந்த அணியின் வேகத்தை குறைத்துள்ளது. பொது எதிரணிக்கு பெருத்த அவமானமாகவும் அந்த வேட்புமனுக்கல் மீதான நிராகரிப்புக்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காகவும், அரசியலில் மோசடியாளர்களை அப்புறப்படுத்து வதற்காகவும் வாள் எடுத்து வீசப்போவதாகவும், அதில் உறவுகளையோ, நண்பர்களையோ பார்க்கமுடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி அவ்வாறு கூறியதையும், முன்னர் ஒரு தடவை போருக்குப் போகும்போது எவ்விதமான ஆயுதங்களை நாம் வைத்திருக்கின்றோம் என்பதை வெளியில் காட்டுவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.

அவ்வாறெனின் ஜனாதிபதி வீசப்போகும் வாள் மத்திய வங்கி மோசடியில் தொடர்புபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவா? அல்லது உள்ளக முரண்பாடுகளில் சிக்குண்டு தேர்தலில் தாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகத்துடன் இருக்கும் பொது எதிரணி மீதா? என்பதுதான் ஊகிக்க முடியாத கேள்வியாக இருக்கின்றது.

இதுவரை மஹிந்த ராஜபக்ச மீதும், அவரது சகாக்கள் மீதும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நடத்திய விசாரணைகளின் முடிவுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. அதன் அடிப்படையில் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்தபோது அதனால் நாட்டில் ஏற்படக்கூடிய சூழலை கருத்தில்கொண்டு அந்தக் கைது கைவிடப்பட்டது.

அதேபோல் மஹிந்த ராஜபக்சவை கைது செய்தால் நாட்டில் எவ்விதமான நிலைமை ஏற்படும் என்பது தொடர்பாகவும் அரசாங்கம் பலதரப்பட்ட கருத்துப்பறிமாற்றங்களை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இறுதியில் அந்தக் கைதிலும் அவசரம் காட்டபடவில்லை.

இவ்வாறு பல முக்கிய நபர்களை கைது செய்வதற்கு ஆயத்தமாகிய பின்னர் அந்த முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வாள் வீச்சு ராஜபக்சக்களை குறிவைத்ததாக அமையுமா?

மத்திய வங்கி பிணைமுறி மோசடியோடு தொடர்புபட்ட குற்றச்சாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது சகாக்களையும் குற்றவாளிகளாகக் குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஆட்சியோடு இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி தனது வாளை ஐக்கிய தேசியக் கட்சி மீது வீசுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், நல்லாட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் ஆலோசனைகளும் நடைபெறுகின்றது.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியானது 95 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டுள்ள நிலையில் மேலும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்தினர் ஆலோசனைகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெற்று முடியும் போது மத்திய ஆட்சியிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றது. உள்ளுராட்சித் தேர்தலானது ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேர்தல் அல்ல என்று பிரதான கட்சிகள் கூறியபோதும், திரைமறைவில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள என்பதே உண்மையாகும்.

– ஈழத்துக்கதிரவன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg