Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அருச்சுனனை அடக்கிய கிருஷ்ண பகவான்! – கடவுளும், பிரச்சினையும்

In ஆன்மீகம்
Updated: 09:53 GMT, Jan 3, 2018 | Published: 09:53 GMT, Jan 3, 2018 |
0 Comments
1324
This post was written by : Puvanes

அன்றாட வாழ்க்கையில் பிரச்சினையில்லாத மனிதர்கள் இல்லை. இப்படி பிரச்சினையில் ஆழ்கின்ற ஒவ்வொருவரும் நாடிச்செல்வது இறைவனிடமே.

அவன் மீது கொண்ட பக்தி பிரச்சினைகளை தீர்க்க வழிசெய்கின்றது. வழிபாடுகள் இறைவனை அடைய காரணமாகின்றது. இறைவழிபாடு என்பது மனதினால் நம்பிக்கையுடன் செய்யவேண்டியது.

அப்படி இறைவழிபாட்டில் ஈடுபடும் போதும்கூட துன்பங்களின் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையே என பலர் நினைப்பதுண்டு. ஆன்மீகத்தின்படி இறைவன் யாருக்கும் காரணமின்றி துன்பம் தருவது இல்லை.

இதனை மஹாபாரதத்தில் இடம்பெற்ற சிறுபகுதி தெளிவாக உணத்திக்கூறுகின்றது. பாரதப்போர் நிறைவுக்கு வந்துவிட்டது. கிருஷ்ணபகவானின் சித்தப்படி அனைத்தும் வெற்றியில் முடிந்தது.

வெற்றிக்களிப்பில் அருச்சுனன் தேரிலேயே அமர்ந்திருக்கின்றான். அப்போது “அர்ஜுனா போர் முடிந்து விட்டதே, இன்னமும் ஏன் தேரிலேயே இருக்கின்றாய் தேரை விட்டு இறங்கு” என்கின்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணா நீ என்னை போரில் வெற்றி பெற செய்திருக்கின்றாய் அதற்கு மகிழ்ச்சி. எனினும் வென்றவனை அவன் தேரோட்டி கை பிடித்து கீழே இறக்கி விடுவதே சம்பிரதாயம். அதை மறந்து விட்டாயே, நீ அதனைச் செய்தால் பெருமை எனக்கல்லவா? ஆனால் நீ என்னை இறங்குமாறு உத்தரவிடுகின்றாயே” என்கின்றான் அருச்சுனன்.

மறுமொழி கிடைத்தது “தேரை விட்டு இறங்கு!” என்ற கிருஷ்ணனின் கண்டிப்பு மிக்க குரல். வேதனையுடன் தேரை விட்டு இறங்கிய அருச்சுனனைப் பார்த்து மீண்டும் ”தேரைவிட்டு தள்ளிப் போ” என்கின்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் கண்டிப்பால் என்ன இது என்ற வேதனைமிகுந்த மனதுடன், வெற்றியையும் மறந்து தேரைவிட்டு அருச்சுனன் தள்ளிச் செல்ல அடுத்து அவனை நோக்கி ஓடிச்சென்ற கிருஷ்னண், அருச்சுனனை அணைத்துக்கொள்கின்றார்.

அடுத்தநொடி தேர் வெடித்து எரியத்தொடங்குகின்றது. நடப்பது புரியாமல் விழித்து, திகைத்து நின்ற அருச்சுனனிடம், “ தேர் எரியப்போவதாலேயே உன்னை அப்பால் செல்லப் பணித்தேன் என்கிறார் கிருஷ்ணன்.

“அருச்சுனா, போரின்போது கௌரவர்கள் உன் மீது எய்த கொடும் அம்புகளை, தேர்க்கொடியில் இருந்து அனுமனும், தேரில் இருந்த நானுமே கட்டுப்படுத்தி வைத்தோம். தேரில் இருந்து நீ இறங்கியவுடனேயே அனுமன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சென்றுவிட்டதால் கௌரவர்களின் சக்தி எழுந்து தேரை பற்றி எரியச் செய்தன. ஆனால் நீயோ உன்னை நான் கௌரவிக்கவில்லை என்கிறாய், போரை வென்றேன் என்கின்றாயே!!” எனக் கூறிய கிருஷ்ணன் புன்னகைக்கின்றான்.

அக்கணம் அருச்சுனனின் செருக்கும் அழிந்துபோனது. அத்தோடு இறைவனின் செயல் அனைத்திற்கும் காரணம் உண்டு எனவும், காரணமின்றி அவன் துன்பம் தரவில்லை என்பதையும் உணர்கின்றான் அருச்சுனன்.

தெய்வத்தின் செயல்படியே அனைத்தும் நடக்கின்றன, அவன் ஆட்டுவிப்புக்கே அனைத்தும் அசைகின்றன. அவன் காரணமின்றி யாருக்கும் துன்பம் தருவதில்லை என்ற பெரிய உண்மையையும் இந்த சிறிய கதை விளக்கிவிட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg