நீதிமன்ற உத்தரவை மீறிய 59 மாணவர்களுக்கு அழைப்பாணை!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 59 மாணவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த 28ஆம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்ற விடயம் குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மாணவர்கள் நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியுள்ள காரணத்திற்காகவே நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்திற்குள் போராட்டம் நடத்தியமை தொடர்பாக பல்கலைக்கழக நிருவாகம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.
அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை, அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தொடர்ந்தும் தமது மறியல் போராட்டத்தினை மாணவர்கள் முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவினை மீறிச் செயற்பட்ட 59 மாணவர்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸார் அழைப்பாணையினை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.