Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரியின் அறிவிப்பும் மறைந்துள்ள உண்மையும்! – திட்டமிட்டு நகர்த்தப்பட்ட அரசியல் சதுரங்கம்

In இலங்கை
Updated: 15:24 GMT, Jan 3, 2018 | Published: 15:20 GMT, Jan 3, 2018 |
0 Comments
1508
This post was written by : Puvanes
ranil003

பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளின் பின்னர் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதி அறிக்கையின் விஷேட அறிவிப்பினை இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டார்.

தென்னிலங்கை அரசியலில் ஆட்டம் காட்டுவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமையும் என அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.

அதன்படி விஷேட அறிவிப்பை வெளியிட்ட மைத்திரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் குறித்த ஊழலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதேசமயம் மத்திய வங்கி ஆளுநரை நியமித்ததன் பொறுப்பு பிரதமர் ரணிலையே சாரும் எனவும் அவர் அதற்கு பதில் கூறவேண்டும் என்ற வகையிலும் அறிக்கையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயிலும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோன்று முறைகேடாக ஈட்டப்பட்ட 11145 மில்லியன் ரூபாவும் மீள பெற்றுக்கொள்ளப்படும் என்ற வகையிலேயே ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்தது.

குறிப்பாக மத்தியவங்கி ஊழல் தொடர்பான விடயமே மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியாக இதுவரையிலும் காணப்பட்டு வந்தது. கூட்டு எதிர்கட்சி உட்பட பலர் அரசாங்கத்தினை குறை கூறும் முக்கிய விடயமாக காணப்பட்டது மத்திய வங்கி ஊழலே.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டது தொடக்கம் பூதாகரமான வகையில் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எழுப்பியதும் இந்த மத்திய வங்கி ஊழலே என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக மறைமுகமாக பிரதமர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டம் பிரதமர் மீது விமர்சனங்களை எழுப்பக்கூடும் அதன்படி அடுத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே கூட்டு எதிர்கட்சி அணியின் பிரதான கோரிக்கையாக அமையப்போகின்றது.

ஏற்கனவே பல தடவைகள் பிரதமரின் பதவி விலகல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்போதைய அறிவிப்பின்படி பிரதமர், மற்றும் மைத்திரி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் பாரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது மத்திய வங்கி ஆளுநரை நியமித்ததற்கு ரணில் பொறுப்பு கூறவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றும் போது, “அர்ஜுன் மகேந்திரன் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அவரை நம்பியே பதவியில் அமர்த்தினேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆக இப்போதைய அறிக்கையின் பதில் ஏற்கனவே பிரதமரால் வழங்கப்பட்டுவிட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மற்றொரு வகையில் குற்றம் சுமத்தப்பட்ட ரவி கருநாயக்க (விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னரே) தனது பதவியை இராஜினாமா செய்து விட்டார்.

இதன்மூலம் தற்போது ஊழல் செய்யப்பட்ட பணம் மீண்டும் பெற்றுக்கொள்வது மட்டுமே அரசாங்கத்தின் கடமையாகும் என்பது தெளிவாகின்றது. வெளிப்படையாக இந்த அறிக்கை முடிவு ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக என நோக்கப்பட்டாலும் மறைமுகமாக அரசாங்கம் தன் மீது இருந்த களங்கத்தை துடைத்துக்கொள்ளவே காய்கள் நகர்த்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது அரசாங்கத்தின் மீது இருந்த பாரியதோர் குற்றச்சாட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை கடந்தகால ஊழலை வெளிக்கொண்டுவருவதாகவே அமையப்போகின்றது.

ஒருவகையில் தற்போதைய ஜனாதிபதியின் அறிவிப்பு, ஏற்கனவே பிரதமர் வெளியிட்ட கருத்து, ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் என்பனவற்றை தொகுத்து நோக்கும் போது அரசாங்கம் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டிவிட்டது என்பது தெளிவாகிவிட்டது என்பதே தென்னிலங்கை புத்திஜீவிகளின் கருத்தாக அமைகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg