கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவருடைய உடல் நிலை குறித்து விசாரித்ததுடன், கருணாநிதிக்கு தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்ததன் பின்னர் இன்று (புதன்கிழமை) இரவு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பின்போது தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டுள்ளார். இதன்போது ரஜினி தனது அரசியல் பிரவேசத்தினை கருணாநிதியிடம் தெரிவித்து ஆசி பெற்றுக்கொண்டாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளதோடு, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
குறிப்பாக தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் எனவும், உண்மை, நேர்மை என்பதே அதல் பிரதானமாக அமையும் எனவும் ரஜினி தெரிவித்திருந்தார். அரசியல் அறிவிப்பின் பின்னர் அவர் முதலாவதாக சந்தித்துள்ள அரசியல் தலைவர் கருணாநிதியே என்பது குறிப்பிடத்தக்கது.