எப்படி இருந்தவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள்: ஐ.பி.எல் கொடுத்த சோதனை

70களில் கொடிகட்டி பறந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இன்று வெளிப்படுத்தும் திறமை அவர்களுடையதா? என்று கேட்டால் அதற்கு பதில் கூற ஒரு கணம் யோசிக்க வேண்டியுள்ளது.
பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் அசைக்க முடியாத வீரர்களை வரிசைப்படுத்தி இரு ஒருநாள் உலகக்கிண்ணத்தை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் பரிணாம வளர்ச்சியடைந்து புது உருவம் பெற்ற இரு ரி-ருவென்ரி உலகக்கிண்ணத்தையும் சுவைத்தது.
இவ்வாறு பல கிண்ணங்களை ஏந்தி கம்பீரமாக வலம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி மீது, யார் கண் பட்டதோ, தற்போது கத்துக்குட்டி அணி கூட, மேற்கிந்திய தீவுகள் அணியை பதம் பார்க்கின்றது.
கிரிக்கெட் சபையில் நிலவிய உட்பூசல், சம்பள பிரச்சினை ஆகியன என்றைக்கு அணிக்குள் வேரெடுக்க தொடங்கியதோ, அன்றே மேற்கிந்திய தீவுகள் கோட்டையின் ஒவ்வொரு செங்கல்லும் சுக்குநூறாக தொடங்கிவிட்டது.
திறமைக்கு மதிப்பு கொடுக்கா விட்டாலும் வாய்ப்பு கொடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது என்று வாய்ப்பு இழந்த முன்னணி வீரர்கள் புலம்பினாலும், அதற்கு காரணம் என்னவோ ஐ.பி.எல் என்பதை அவர்கள் ஏற்க மறுகின்றனர்.
ஐ.பி.எல் என்ற கண்கட்டி வித்தை போட்டி ஆரம்பித்தன் பின், பணம் என்ற காந்தத்தால் அதிகமாக ஈர்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களே இன்று அணியில் இடம்பெறமுடியாமல் திணறுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கிறிஸ் கெய்ல், டுவாயன் ஸ்மித், பிராவோ, ரஸல்ஸ், சுனில் நரைன், டேரன் ஷமி, கிரன் பொலார்ட், சமுவேல்ஸ்போன்ற வீரர்களே இன்று சொந்த அணிக்காக விளையாட தயங்குகின்றனர்
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள் அதற்கு இவர்களை உதாரணமாக முன்னிறுத்தா விட்டாலும், அதில் அரை பங்காவது இவர்களுக்கு பொருந்தும் எனலாம்.
ஐ.பி.எல் மட்டுமல்லாமல், பிக் பாஷ், பி.பி.எல், போன்ற வெளிநாட்டு ரி-ருவென்ரி லீக் தொடர்களில் பணத்தை அள்ளிக் கொடுப்பதால் பெரிய தொகைக்கு ஏலம் போகும் முன்னணி மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், சொந்த நாட்டுக்காக விளையாட மறுப்பது அவர்களின் திறமையை காயப்படுத்தும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
திறமைக்கு வயதொன்றும் தடையில்லை என்பது இயற்கை கண்ட உண்மை. அதற்கு உயிர் கொடுத்தவர்கள் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள். 30 வயதை கடந்தும் எதிரணி வீரர்களை அச்சுறுத்தக் கூடிய வல்லமை கொண்ட மேற்கிந்திய தீவுகள் வீரர்களால் அணியை தலைநிமிரச் செய்வது என்பது சுலபமான காரியம்.
ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுப்பது அவர்களின் முன்னால் இருக்கும் பணம் என்ற திரைதான் என்றால் அந்த கருத்தை அவர்களால் கூட மறுக்க முடியாது.
வாழ்க்கையே கொஞ்ச காலம் அதில் வாலிபம் கொஞ்ச நேரம் என்பார்கள் அந்த கொஞ்ச நேரத்திலாவது அவர்கள் சொந்த அணியினை எண்ணி அணியை வலுப்படுத்த வேண்டும் என்பதும் எதிர்கால வீரர்களுக்கு சிறந்ததொரு பாதையினை அமைத்துவிட்டு செல்ல வேண்டும் என்பதுமே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஆனால் எண்ணங்கள் என்றாவது வண்ணங்கள் ஆகலாம். அதற்கான எண்ணங்கள் இனியாவது வீரர்கள் மத்தியில் எழ வேண்டும். எழும் என நாங்களும் நம்புவோம்…