Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கம்பஹா மாவட்டத்தில் அனைவருக்கும் குடிநீர்: அமைச்சர் ஹக்கீம்

In இலங்கை
Updated: 12:20 GMT, Jan 4, 2018 | Published: 11:19 GMT, Jan 4, 2018 |
0 Comments
1158
This post was written by : Elakkiya

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீரை பெற்றுக் கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மினுவாங்கொடை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கள்ளொளுவை ஹிஜ்ரா வீதியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், “மினுவாங்கொடை தொகுதியை உள்ளடக்கியவாறு கம்பஹா, அத்தனகல்ல பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை ஆரம்பித்திருக்கிறோம். 23,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பாரிய நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து கல்எலிய, கஹட்டோவிட்ட, அத்தனகல்ல, மினுவாங்கொடை, பசியால, கட்டானை உள்ளிடங்கலாக கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் நீர் வழங்கப்படும். எனது அமைச்சில் அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
அதன்படி 2020 முதற்பகுதியில் கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் குழாய்நீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளொளுவை மைதானத்தை மண்நிரப்பி புனரமைத்தல் மற்றும் ஹிஜ்ரா வீதியை இருபக்கமும் வடிகான் அமைத்து புனரமைத்தல் போன்ற மக்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு அமைச்சினூடாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு புதிய தேர்தல் முறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக மினுவாங்கொடை பிரதேச சபையில் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டியது தமது தார்மீக பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg