Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா?: சுமந்திரன் கேள்வி!

In இலங்கை
Updated: 14:47 GMT, Jan 6, 2018 | Published: 14:47 GMT, Jan 6, 2018 |
0 Comments
1851
This post was written by : Ravivarman

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பருத்தித்துறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் வேறு சில விடயங்களில் கூட்டமைப்பு விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றது. அது தவறு என விமர்சிப்பவர்கள் அதற்கு வழி என்ன என்பதை சொல்லவேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். குறிப்பாக ‘ஏக்கிய இராச்சிய’ என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம்.

அது எதற்கான இணக்கம் என்றால் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து நாட்டை பிரிக்கிறார்கள் என்பதுதான். நான் சிங்கள மக்களை சந்தித்து பேசுகிறபோது நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை.

ஆனால் பூரணமானதும், மீளப் பெறமுடியாததுமான அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள் என கேட்கிறேன். இதனாலேயே நாங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு இணங்கினோம்.

அதிகாரப் பகிர்வு தவிர்ந்த மற்றய விடயங்களில் நாங்கள் இணக்கப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம். ஆனால் அதிகாரப் பகிர்வு விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிப்போம்.

காரணம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் விடயத்தில் விட்டு கொடுப்புக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் எங்களுக்கும் பூரணமான திருப்தியில்லை.

ஆனால் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேவே இந்தளவு விடயங்களைச் சாதிக்க முடிந்தமையில் எமக்கு பூரணமான திருப்தி இருக்கின்றது’ என எ.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg