மெஸ்சியின் மதிப்பு 5343 கோடிகள்!! – உருவாகும் புதிய சிக்கல்

பார்சிலோனா அணியில் விளையாடிவரும் கால்பந்து ஜாம்பாவான் மெஸ்ஸி வேறு அணிக்காக விளையாடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெஸ்ஸி, பார்சிலோனா அணியின் ஒப்பந்தந்தில் கையெழுத்திடாமல் இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் குறித்த அணி புதிய ஒப்பந்தம் ஒன்றினை நீடித்தது.
மெஸ்ஸியை வேறு அணி நாடக்கூடாது என்பதற்காக பார்சிலோனா மெஸ்ஸிக்காக மதிப்பை 843 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (இந்திய மதிப்பின்படி 5343 கோடி ரூபா) கூறி ஒப்பந்தம் கைச்சாத்திட்டுக்கொண்டது.
இந்தநிலையில் ஸ்பெயின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த கேடலோனியா பிராந்தியத்தில் தனி நாட்டுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஸ்பெயினி்ல் இருந்து கேடலோனியா பிரியும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தப்பிரிவு ஏற்படுமாயின் பார்சிலோனா கிளப் கேடலோனியா பிராந்தியத்தில் அமைந்துள்ளதால் லா லிகா தொடரில் பார்சிலோனாவிற்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
பார்சிலோனா செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மெஸ்ஸி லா லிகா தொடரில் விளையாடும் போது மட்டுமே அந்த ஒப்பந்தமானது செல்லுபடியாகும், தவிர்த்து வேறு நாட்டின் தொடர்களில் விளையாடும்போது அந்த ஒப்பந்தம் மெஸ்ஸியை கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கேடலோனியா தனியாக பிரிந்துவிடுமாயின் மெஸ்ஸி வேறு அணிகளுக்கு விளையாடும் சாத்தியக்கூறு ஏற்படும். அப்படியான நிலை ஏற்பட்டால் மெஸ்ஸியை வாங்கும் அணிக்கு மிகப்பெரிய இலாபம் ஏற்படும் என்பதோடு பார்சிலோனாவிற்கு பாரிய இழப்பு ஏற்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.