Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்தை வென்றது ஆஸி: வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது இங்கிலாந்து

In கிாிக்கட்
Updated: 05:02 GMT, Jan 8, 2018 | Published: 05:02 GMT, Jan 8, 2018 |
0 Comments
4612
This post was written by : Anojkiyan

கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரை வென்று சொந்த இரசிர்களின் முன்பாக சாம்பல் கிண்ணத்துடன் கர்வமாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றது அவுஸ்ரேலிய அணி.

திறமை மற்றும் காலநிலையை செவ்வனே பயன்படுத்தி, இங்கிலாந்தை வெறுங்கையுடன் அனுப்ப அவுஸ்ரேலியா எடுத்த முயற்சி வீண் போகவில்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்…

கடந்த 23ஆம் திகதி அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான யுத்தம் இன்று படுதோல்வி, சரித்திர வெற்றி என்ற இரு பக்கங்களுடன் சந்தோஷம் கவலை என்ற மனநிலையை வெளிப்படுத்தியவாறு சிட்னியில் நிறைவுக்கு வந்தது.

ஐந்து போட்டிகளை கொண்ட இந்த விஷப் பரீட்சையின், முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தை தலைகுனிய வைத்த முதல் தோல்வியின் பின், மனமுடைந்த வீரர்ர்கள், தன்னை தேற்றிக்கொள்வதற்காக மனதில் முணுமுணுத்த அடுத்த போட்டியின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்பு, அடுத்த போட்டியிலும் பொய்த்து போகுமென அவர்கள் அன்று எதிர்பார்த்திருக்க வில்லை.

ஆனால், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது வெற்றிபெற வேண்டுமென எண்ணிய இங்கிலாந்துக்கு, அப்போதும் தோல்வியே காத்திருந்தது. 120 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய வெற்றியை பதிவு செய்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

இதையடுத்து வாழ்வா? சாவா? என்ற நிலைப்பாடுடன் பெர்த்தில் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, எதிர்பார்த்த அனைத்து விடயங்களையுமே அவுஸ்ரேலியா தவிடு பொடியாக்கியது.  இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்கள் என்ற அவமானத் தோல்வியை இங்கிலாந்து சந்திக்க நேரிட்டது.

போட்டி விடயத்தில் கொஞ்சம் கூட பரிதாபம் பார்க்க தயங்கிய அவுஸ்ரேலியாவுக்கு, ஆறுதல் வெற்றியாவது பெற்று பாடம் புகட்ட வேண்டுமென எண்ணிய இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட் போட்டியில் சற்று சாதுரியமாக செயற்பட்டது.

புலி பது பதுங்குவது பாயத்தானே என எண்ணிய அவுஸ்ரேலிய அணியினர், கடுமையாக போராடி நான்காவது டெஸ்ட்டை சமநிலை பெறச்செய்தனர்.

தொடரின் இறுதி கட்டமும், ஆண்டின் முதல் கட்டத்திலும் இரு அணிகளும் காலடி எடுத்து வைத்தன. ஆனால் இவர்களை இயற்கையின் உணர்சிகள் விட்டு வைக்க வில்லை. வெற்றியின் வேகமும், தோல்வியின் துரத்தலும் நீடித்துக் கொண்டே தான் இருந்தன.

ஆம் மீண்டும் தோல்வி. இறுதியாக சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து.

எடுத்துச் சென்ற சாம்பலை அவுஸ்ரேலியாவை துவம்சம் செய்து மீண்டும் நாட்டிற்கே எடுத்து வருவோம் என இங்கிலாந்து இரசிகர்களிடம் உறுதிபூண்டு வந்த இங்கிலாந்து வீரர்கள், தற்போது வெறுங்கையுடன் நாடு திரும்புகின்றனர்.

இளம் இரத்தம். ஆனால் அதில் உள்ள இரத்த கொதிப்பு வேறு தானே என்பதை அசால்டாக நிரூபித்துவிட்டார் அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித். அதற்கு அவருக்கு கிடைத்த வெகுமதியே தொடர் நாயகன் விருது.

ஆனால் இறுதியிலும் மனம் துவண்டு விடவில்லை இங்கிலாந்து அணியினர். எதிர்வரும் 2019ஆம் ஆண்டு சொந்த மைதானத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் பெற்ற தோல்விகள், ஒரு துளியேனும் குறையாமால் திருப்பி கொடுக்க வேண்டுமென சபதத்துடன் நாடு திரும்புகின்றனர்.

சாம்பல் துகள்கள் குவிக்கப்பட்ட கிண்ணம், அணிகளுக்கிடையில் பரிமாறப்பட்டாலும் இரசிகர்களிடம் விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் எப்போதும் குறையாது…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg