Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியும் எதிர்க்கட்சியும்..

In
Updated: 11:47 GMT, Jan 12, 2018 | Published: 10:29 GMT, Jan 12, 2018 |
0 Comments
1062
This post was written by : srikkanth
PMS-Sampanthan-860-01

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் காலத்திற்கு காலம் ஒரு பலமான எதிர்கட்சி ஒன்று இருந்து வந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கின்றபோது, ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து செயற்படுவதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியாக செயற்படுவரும் வழக்கமான இலங்கை அரசியல் பின்னணி.

உண்மையில் ஜனநாயகக் கோட்பாடுகளின் பிரகாரம் வலுவான எதிர்க்கட்சி ஒன்று இருப்பதே சிறந்த மக்களாட்சிக்கு வலுச்சேர்க்கும் எனப்படுகின்றது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்ல விடயங்களை வரவேற்பதும், சில தான்தோன்றித்தனமான அல்லது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்களை எதிர்ப்பதும் எதிர்கட்சியின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆனால் தற்போதை நல்லாட்சியின் அது நடக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்பட முஸ்லீம் கட்சிகள் ஒரணியில் ஒன்று சேர்ந்திருந்தனர்.

ஈற்றில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்க, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுக் கொண்டு புதிய அமைச்சரவையும் உருவாக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு தேசிய கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் யாராலும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனையடுத்து மாற்றத்திற்கான பங்களிப்பு செய்த கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஏற்கனவே மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவரது ஆட்சியில் பொதுஜன ஐக்கிய முன்னணியாகச் செயற்பட்ட கட்சிகள் – சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விலக்கிக் கொள்ளப்பட்டனர், விலகிக்கொண்டனர்.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் 16 ஆசனங்களை பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மாறியது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஜனாதிபதி,பிரதமர், ஆகியோருக்கு அடுத்தபடியாக வருபவர்.

ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் அல்லது, அரசாங்கத்தை நெறிப்படுத்தும் வல்லமையுடனான ஒரு எதிர்க்கட்சி காணப்படவில்லை என்பதே பொதுவான விமர்சனமாக காணப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கட்சிகளை ஒன்றிணைத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று பெயருடன் செயற்பட்டுவருகின்றது.

அது முழுக்க முழக்க நல்லாட்சிக்கு விரோதமான கருத்துகளையும், ஆட்சியாளர்கள் மீது பொறுப்பற்ற கருத்துக்களையும் வெளிப்படுத்தி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வருகின்றது.

ஆக இந்த இடத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியைப் பற்றி பேசத் தேவையில்லை காரணம் அவர்கள் மஹிந்தவின் விசுவாசிகள், அல்லது அவரின் அச்சுறுத்தலுக்கு உட்படவர்கள் என்றும் சொல்லலாம்.

உண்மையில் நல்லாட்சியினை நெறிப்படுத்தும், தட்டிக்கேட்கும், சுட்டிக்காட்டும், வேலையினை கூட்டமைப்பு செய்ய வேண்டும். ஆனாலும் அது நடக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு, தேர்தல்கள் வருகின்றபோது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் இலக்குடன் செயற்பட்டுவருகின்றது.

எதிர்க்கட்சி இலங்கைத் தீவு முழுவதற்கும் பொதுவானது ஆனாலும் சிங்கள மக்களின் அல்லது முஸ்லீம், மலைய மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது குறைவு. மலையகத்தில் இயற்கை அனர்த்தம் வந்தால் மட்டும் சற்றுப் பேசுவார்கள். அதைவிடுத்து ஏதும் இல்லை.

நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, கடன், சர்வதேச வர்த்தக சந்தை, அரசியல் தீர்வு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அமைச்சுக்களின் செயற்பாடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு நிறையவே இருக்கின்றது ஆனாலும் எதிர்க்கட்சி இது தொடர்பில் பேசுவதில்லை போன்ற விமர்சனங்கள் அண்மைக் காலமாக கூட்டமைப்பு கட்சிகளுக்குள் இருந்துகூட வெளிப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

எதிர்க்கட்சியான கூட்டமைப்பு இதுவரை எந்தவொரு சிங்களப் பகுதிக்காகவாது போயிருக்கிறதா? அல்லது முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து இருகின்றதா – என்றால் இல்லை என்றே மக்கள் பதில் அளிப்பார்.

எதிர்க்கட்சி ஆளும் கட்சியுடன் நல்லுறவைப் பேணிக்கொண்டு, பட்டுப்படாமல் செயற்பட்டுவருகின்ற நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாட்டிற்கும், மக்களுக்கும் தேவையற்ற விடயங்களை கூவிக் கூவி விற்கின்றது.

இதனைவிட இரண்டு பிரதான கட்சிகளும் நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கவே செயற்படுகின்றார்களே அன்றி பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகளைக் காணவில்லை. யுத்த காலத்தில் இடம்பெற்ற பல அபிவிருத்திகள் கூட, இன்றைய நல்லாட்சியில் இல்லை என்பதே மக்களின் கணிப்பு.

ஆகவே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பெற்றுக் கொண்ட தேசிய பொறுப்பு மற்றும் கடமையினை சரிவரச் செய்து நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு பொதுமான அழுத்தத்தினையும், அதிர்வினையும் கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.

அவ்வாறு செயற்படுகின்றபோது நாடும் மக்களும் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் வெற்றி கொள்வார்கள்.

அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேசிய அளவில் சிங்கள மக்களின் ஆதரவினைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)