Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சிகளோ சின்னங்களோ ஒரு பொருட்டல்ல: மக்கள் சேவையே எமது இலக்கு என்கிறார் ரிஷாட்

In இலங்கை
Updated: 11:11 GMT, Jan 12, 2018 | Published: 11:11 GMT, Jan 12, 2018 |
0 Comments
1118
This post was written by : Anojkiyan

மக்கள் சேவையே எமது இலக்கு என்பதால் கட்சிகளோ, சின்னங்களோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கொழும்பு புதுக்கடையில் நேற்று மாலை (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் வாக்களிக்கும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டமை வரலாறு. பெரும்பான்மைக் கட்சிகளின் தலைவர்கள், நமது சமூகத்தின் வாக்குகளை போலியான வாக்குறுதிகளை வழங்கி கொள்ளையடித்து, அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், எம்மை ஏறெடுத்தும் பார்க்காத துரதிஷ்ட நிலையே நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்றது.

ஐ.தே.க வின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முக்கிய பாத்திரம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில், நாமும் பங்காளிக் கட்சியாக இருப்பதனால், கொழும்பு மாவட்டத்தில் அவர்களுடன் இணைந்து போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விடுத்த கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க முடியாது. எனவே, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

அண்மைய சில நாட்களுக்கு முன்னர், நான் அம்பாறை மாவட்டத்தில் பேசிய உரை ஒன்றை சிலர் திரிவுபடுத்தி, அதனை பூதாகாரப்படுத்தியிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் மயில் சின்னத்தில் போட்டியிடும் நாம், அந்தப் பிரதேசங்களில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்களில் யானைக்கு வாக்களிக்க வேண்டாமென கூறாமல், நாம் வேறு எப்படிக் கூற வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது நான் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைக்குள் நின்று சொல்கின்றேன். யானைக்கு வாக்களித்துப் பழக்கப்பட்ட மக்கள் மத்தியிலே நின்று சொல்கின்றேன். கட்சி என்பது மார்க்கமும் அல்ல. சின்னம் என்பது மார்க்கமும் அல்ல. எந்தக் கட்சி சரியான பாதையில் செல்கின்றதோ அந்தக் கட்சியை ஆதரியுங்கள். அவர்களின் பின்னால் அணிதிரளுங்கள். சின்னங்களையும், கட்சிகளையும் மார்க்கம் போல காட்டி அரசியல் நடத்தும் கட்சிகளை நிராகரியுங்கள். இதன் மூலமே நீங்கள் விமோசனம் பெறமுடியும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg