Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வருடத்தின் முதல் கிராண்டஸ்லாம்! – முத்திரை பதிக்கப் போவது யார்?

In
Updated: 05:27 GMT, Jan 13, 2018 | Published: 11:49 GMT, Jan 12, 2018 |
0 Comments
1039
This post was written by : srikkanth

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது உண்மைதான். தைப்பிறந்தால் யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ, டென்னிஸ் இரசிகர்களுக்கும் சரி டென்னிஸ் வீரர்களுக்கம் சரி கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது.

Australian-Open-stadium123

ஆம்! நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் கிராண்டஸ்லாம் போட்டித் தொடரான ‘அவுஸ்ரேலிய பகிரங்க னெடன்னிஸ்’ தொடர் ஜனவரியில் தான் ஆரம்பமாகும்.

இந்த வருடத்திற்கான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில் மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துடைய இந்த அவுஸ்ரேலிய பகிரங்க கிண்ணம் பலரது கனவுக் கிண்ணமாக இருந்த போதிலும், அது பலருக்கு இன்னும் கைகளுக்கு எட்டாத கனவுக் கிண்ணமாகத் தான் இருக்கிறது.

திறந்த மைதானத்தில், 1905 ஆண்டு முதன் முதலாக தனது அத்தியாயத்தினை ஆரம்பித்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இந்த வருடம் அதன் 106 வது போட்டித் தொடரை நடத்தவுள்ளது.

முதலாம் உலகப்போர் இடம்பெற்ற 1916, 1917, 1918 ஆம் ஆண்டுகளிலும், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1941 முதல் 1945 வரையிலான காலப்பகுதியிலும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்கள் நடத்தப்பட்டிருக்கவில்லை.

113 வருட பழைமையைக் கொண்ட இந்த பகிரங்க டென்னிஸ் தொடர், ஆடவர் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர், சிறுவன் மற்றும் சிறுமி ஒற்றையர் போட்டிகள், சிறுவன் மற்றும் சிறுமி இரட்டையர் போட்டிகள், அதேபோல் அங்கவீனமடைந்த சக்கர நாற்காலியில் விளையாடும் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என்ற வகைப்பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

australianopentennishistory123

பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகின்ற இந்த பகிரங்க டென்னிஸ் தொடரில், இதுவரையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், 81 வயதைத் தொட்டிருக்கும் அவுஸ்ரேலியாவின் மூத்த வீரர் ரேய் எமர்சன் மற்றும் செர்பிய வீரர் நொவாக் ஜோகோவிக் ஆகியோர் தலா 6 முறை பட்டம் வென்றுள்ளனர்.

Roy_Emerson123

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 75 வயதான அவுஸ்ரேலியாவின் மூத்த வீராங்கனை மார்க்கரட் கோர்ட் 11 முறை கிண்ணம் வென்று சாதித்துள்ளார்.

இவர்களைத் தவிர, ஆடவர் இரட்டையர் பிரவில் எய்டிர்ன் குயிஸ்ட்  10 தடவைகளும், பெண்கள் இரட்டையர் பிரிவில் தல்மா க்கொய்ன் லாங்  11 தடவையும் கிண்ணங்களை வென்று சாதித்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த வருடம் ஆடவர் ஒற்றையர் கிண்ணத்தை சுவிசர்லாந்தின் ரொஜர் பெடரர் கிண்ணம் வென்று சாதித்தார்.

இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தை வென்ற பெடரர், ஆறு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சாம்பியன்ஸ் கிண்ணத்தை கடந்த வருடம் தன் கைகளில் ஏந்தினார்.

அதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7 வது முறையாக அவுஸ்திரேலிய கிண்ணத்தை வென்றதுடன், 23 வது கிரண்ட்ஸ்லாம் கிண்ணத்தையும் வென்று சாதனைப் படைத்திருந்தார்.

இந்த வரலாற்றைக் கொண்ட அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்காக வீரர்கள் சிறந்த தயார்படுத்தல்களுடன் காத்திருக்கிறார்கள். புதிய வருடம் – புதிய முயற்சி – புதிய வியூகம் என சகலதையும் புதுப்பித்தவாறு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த தொடரில் ஆரம்பிக்கும் தமது வெற்றிப் பயணம் அடுத்தடுத்த தொடர்களிலும் நீடித்து, வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைப் பயணமாக தொடரவேண்டும் என்பதே வீர வீராங்கனைகளின் எதிர்ப்பார்ப்பகும்.

அடுத்த வாரத்தில் அதவாது 16.01.2018 ஆம் திகதி அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான தகுதிகான் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டித் தொடர் குறித்த எதிர்ப்பார்ப்புக்களைப் போல், அதிர்ச்சிகளும் காத்திருக்கத்தான் செய்கின்றன.

பல முன்னணி வீர வீரராங்கனைகள் களமிறங்க காத்திருக்கும் இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே பல அதிர்ச்சி செய்திகளும் வெளிவந்தவண்ணமுள்ளன.

உலகின் முதல் நிலை வீரராக திகழ்ந்தவரும், பிரித்தானியாவின் புகழ்பூத்த டென்னிஸ் நட்சத்திரமான அண்டி முர்ரே காயத்தினால் அவுஸ்திரேலிய தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் இந்த பருவக்காலத்திற்கான அவுஸ்ரேலியத் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் குழந்தையொன்றை ஈன்றெடுத்த செரீனா, தற்போது டென்னிஸ் விளையாடும் வீரராங்கனைகளில் அதிக முறை அவுஸ்ரேலிய பட்டத்தை வென்றவராகவும் கருதப்படுகிறார்.

இவர்களைத் தவிர இன்னும் இன்னும் பல வீர வீராங்கனைகள் விலகல் குறித்து அறிவித்து வரும் நிலையில், இரசிகர்கள் ஏக்கத்தில் காணப்படுகின்றனர். என்ற போதிலும், காயத்தால் அவதிபட்டு பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த பல முன்னணி வீர – வீராங்கனைகள் மீண்டும் அவுஸ்ரேலியத் தொடரில் களமிறங்குவது ஏக்கத்தோடு காத்திருக்கும் இரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமையும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே எதிர்ப்பாரப்பு, ஏக்கம், அதிர்ச்சி, வேதனை என்ற பன்முக உணர்வுகளைக் கொடுத்திருக்கும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ், இந்த முறையும் அதிர்ச்சியுடன் கூடிய பல திருப்பு முனையான முடிவுகளைக் கொடுக்கும் என்றே விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிண்ணம் என்பது யாருக்கும் நிரந்திரம் இல்லை என்பதை வரலாறு எமக்கு சொல்லிக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் இந்தமுறை அவுஸ்ரேலிய பகிரங்க கிண்ணத்தை முத்தமிடப் போகும் அந்த வீர, வீராங்கனைகள் யார் என்பதை அறியும் ஏக்கத்தோடு, ஆரம்பமாகவிருக்கும் அந்த தொடருக்காக காத்திருப்போம்…..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)