முசலியில் சுமார் 3 கோடி பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

முசலி-காயக்குழி கிராம பகுதியில், சுமார் 356 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கேரள கஞ்சா பொதிகள், அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல தயாராகி கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸார் மற்றும் கடற்படையினர் இதனை கைப்பற்றினர். குறித்த கேரள கஞ்சா பொதிகள், சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரியவந்துள்ளது.
இருப்பினும் இதன்போது எவரும் கைதுசெய்யப்படவில்லை. குறித்த கஞ்சாப்பொதிகள் தற்போது சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.