Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் நாட்டை ஆளப்போகிறவரும் – தமிழை ஆண்டாளும்: தமிழக இன்றைய நிலை!

In
Published: 14:34 GMT, Jan 13, 2018 |
0 Comments
1022
icon_com
This post was written by : srikkanth
rajini123

“வந்திட்டேன்னு சொல்லு திரும்ப வந்திட்டேன்னு….” இந்த வசனத்தை இயக்குநர் பா. ரஞ்சித் கபாலி திரைப்படத்தில் தெரிந்தே தான் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் அவருக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகமும் முழுவதிலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டமிருக்க, ஜப்பானில் ரசிகர் மன்றமே வைத்திருக்கிறார்கள் அந்நாட்டு ரஜினி ரசிகர்கள்.

நடிகர் கமலஹாசனோடு ஒப்பிடும்போது, ரசிகர்களின் எண்ணிக்கை ரஜினிகாந்திற்கு அதிகம் என்கின்றன சினிமாத்துறை. சினிமாவில் அறிமுகமாகி அதன் மூலமாக தமிழ் நாட்டின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவர்கள் ஏராளமானவர்களைச் சொல்லலாம்.

முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா என்று அத்துனை பேரும் சினிமா வழிவந்தவர்கள்தான்.  இன்று அதே பாதையில், இரு பெரும் நட்சத்திரங்கள் காலெடியெடுத்து வைத்திருக்கின்றன. ஒருவர் ரஜினி காந்த்இ மற்றையவர் கமல ஹாசன்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி “நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி” அறிவித்த நாளில் இருந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும். அத்துனை ஊடகங்களிலும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பேசு பொருளாக மாறியிருக்க, இன்னொரு புறத்தில் அவர் தமிழர் அல்ல. மராட்டியர், கர்நாடகக்காரன் என்று அவருக்கு எதிரான பேச்சுக்கள் சர்ச்சைகளாக வெளிப்பட்டு நிற்கிறன.

இதற்கு ஒருபடி மேல் சென்று இன்னொரு தரப்பு, ஆளும் மத்திய பா.ஜ.கவின் பிம்பம் தான் ரஜினி என்றும், நேரடியாக ஆட்சிக்கு வரமுடியா பாஜக, உச்ச நட்சத்திரங்களைக் கொண்டு தமிழ் நாட்டை தன் வலைக்குள் கொண்டுவர எத்தனிக்கிறது என்கிறார்கள் அந்தத்தரப்பினர்.

இதற்கு முதல் மூல காரணம், தமிழ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும்போதெல்லாம் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியதுதான். தேர்தலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி, ஆன்மீக அரசியல்தான் தன்னுடையது என்று கூற வெடித்தது சர்ச்சை.

ஆன்மீக அரசியல் என்றால், சாதி – மதம் அற்ற அறத்தின்பால் கொண்ட அரசியல் என்று ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் எதிர்தரப்பினர் இல்லை.

அரசியலுக்கு வருவேனா – மாட்டேனா? என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக அறிவிக்கத் தெரியாத ஒருவர் எப்படி தமிழகத்தை ஆட்சி செய்து மக்களுக்கு நல்லது செய்வார் என்று இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்கள் மற்றொரு தரப்பு விமர்சகர்கள்.

கடந்த 1996ம் ஆண்டே ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதுதான் உண்மை. அன்றைய தேர்தலில் ஜெயலிலதா அம்மையார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தையும், தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் மேற்கொண்ட பிரசாரம் அன்றைய ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தது. கலைஞர் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கியது அன்றைய தேர்தல் பிரசாரம்.

அன்றே கருணாநிதி ரஜினியை தி.மு.கவில் இணையச் சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் அப்பொழுது தற்காலிகமாக மறுத்திருந்தவர் இன்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதாவது 1996 இல் வந்தவர் மீண்டும் அதே வேகத்தோடு 2018ம் ஆண்டு வருவார் என்பதை பா.ரஞ்சித் சொல்லியிருக்கலாம்.

ரஜினிகாந்திற்கான எதிர்ப்பு இந்தளவு தூரத்திற்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனினும், அவரின் கொள்கைகள் – கோட்பாடுகள் – கட்சியின் சின்னம் போன்ற அறிவிப்புக்கள் மக்களின் மற்றும் எதிர்ப்பாளர்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

ஒரு பக்கத்தில் திராவிடக் கட்சிகள் மற்றொரு பக்கத்தில் தமிழ்த் தேசியவாதிகள், ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பால் கிலிபிடித்துப் போயிருக்கிறார்கள். தன்னுடைய அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டிருக்கும் ரஜினி, முத்துவேலர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றது திராவிடக் கட்சிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

என்னதான் ரஜினிகாந்தை சில கட்சிகள் எதிர்த்தாலும், அவருக்கான ரசிகர்கள் கூட்டமும், முன்னணி நடிகர்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Vairamuthu123

இந்தப் பரபரப்புக்கள் அடங்குவதற்கு முன்னர் தி.மு.கவின் ஆஸ்த்தான புலவர் என்று வர்ணிக்கப்படுகின்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் கட்டுரை வெளியீட்டின்போது அமெரிக்க பேராசிரியர், ஆண்டாள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்களை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

வைரமுத்துவின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச். ராஜா கடுமையாக தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டித் தீர்த்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக இந்துத்துவவாதிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். வைரமுத்துவிற்கு ஆதரவாக சீமான், சு.ப.வீரபாண்டியன் போன்ற தமிழ் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.

வைரமுத்து தன்னுடைய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துவதாக பதில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் இந்தச் சர்ச்சை ஓய்ந்தபாடாக தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வழமை போன்று அந்தப் பக்கம் ஒர் அணி, இந்தப் பக்கம் ஓர் அணி என்று சர்ச்சை நீடிக்கிறது.

இந்நிலையில் வைரமுத்துவின் கருத்திற்கு எதிராக தமிழகத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்ப விரும்புகின்ற சில தரப்புக்கள் மக்கள் மத்தியில் தங்களை ஹீரோகவாக்கும் தீவிர முயற்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறானவர்கள் தங்களுக்கும் வைரமுத்துவிற்கும் இடையில் இருக்கின்ற உறவுகள் – தொடர்புகளின் அடிப்படையில் வைரமுத்துவின் விவகாரத்தை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்ந விவகாரம் இன்னும் சில காலத்திற்கு ஊடகங்களுக்கு தீனி போடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கின்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு தொடங்கிய பரபரப்புச் செய்திகள் இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறன. ஒவ்வொரு பிரச்சினைகள் மாறிமாறி அதிர வைக்கின்றன மக்களை!

ஒரு தலைமைத்துவத்திற்கான இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. அதற்கான இடத்தை ரஜினியா – கமலா நிரப்புவது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இருப்பினும் இந்த இரு பெரும் நட்சத்திரங்களைத் தாண்டி மு.க. ஸ்டாலின் வெற்றி பெறுவாரா? அல்லது மற்றைய இதர கட்சிகள் முன்னோக்கி மூன்றாம் அணியில் இணைந்து கொள்ளுமா என்பதை அடுத்தடுத்த வாரங்களில் அறிந்து கொள்ள முடியும்.

-ஹரிகாலன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)