மைத்திரியின் அடுத்தகட்ட நகர்வு என்ன? – பிரதமர் சிக்குவாரா?

மத்தியவங்கியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயம் தொடர்பாக விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ரவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றினைப்பெற்றுக் கொள்வதற்காக ரவி கருணாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றபோது அறிக்கையின் பிரதி அவருக்கு வழங்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அதேசமயம், மத்தியவங்கி கடந்தகாலத்தில் ரவிகருணாநாயக்கவின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை எனவும் அது பிரதமரின் கட்டுப்பாட்டுக்கு கீழேயே இயங்கியது எனவும் விசாரணை அறிக்கை வெளியானதன் பின்னர் ரவியின் வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும், மத்திய வங்கியின் ஊழலுக்கு ரவி கருணாநாயக்கவின் மீது மட்டும் குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போம் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் தற்போது அறிக்கையினை பெற்றுக்கொண்டுள்ள ரவிகருணாநாயக்கவின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும்? அவர் பிரதமருக்கு எதிராக கருத்து வெளியிடுவாரா? போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தற்போதைய சூழலில் பிரதருக்கு எதிராக ரவிகருணாநாயக்க கருத்துகளை முன்வைப்பாராயின், பிரதமரின் பதவி விலகல் கோரிக்கை மேலும் வலுவடையும், அதனைத்தொடர்ந்து மைத்தியிரின் நடவடிக்கை எவ்வாறு அமையும் எனவும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ரவிகருணாநாயக்க மறுப்பு அல்லது வழக்கு தொடுப்பாராயின் அது குறித்த விசாரணைக்குழுவின் நம்பிக்கைத்தன்மைக்கு பாதகமாக அமையும் என்பதே வெளிப்படை எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.