குலேபகாவலி எப்படி?
In திரை விமர்சனம் January 18, 2018 7:06 am GMT 0 Comments 2442 by : Vithushagan

சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள்.
தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி.
மற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்ட ரேவதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார்.
இவர்களால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சத்யன், இந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் அந்த வைரங்கள் பிரபுதேவா, ஹன்சிகாவிடம் கிடைத்ததா? போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். நடனம், நகைச்சுவை, முக பாவனைகள் அனைத்திலும் நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே பிரபுதேவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாகவும், தங்கைக்காக ஏங்குவதும் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் நிற்கிறார் ரேவதி. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை அவர்களுக்கு உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கின்றனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கல்யாண். கதாபாத்திரங்கள் தேர்விலே முதல் வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும், அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முழுநீள நகைச்சுவை என்றாலும் முழுவதும் ரசிக்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் நகைச்சுவை பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் புத்துணர்வுடன் இருக்கிறது. அதுபோல், மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இசையும், ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.