Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை: பைசர் முஸ்தபா தகவல்

In இலங்கை
Updated: 15:51 GMT, Jan 19, 2018 | Published: 15:51 GMT, Jan 19, 2018 |
0 Comments
1142
This post was written by : Anojkiyan

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சாய்ந்தமருது பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோர் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி, உங்களையும் என்னையும் ஏமாற்றியுள்ளனர். இங்கு உங்களுக்கு ஒரு வாக்குறுதியை தந்து விட்டு, என்னிடம் வந்து இன்னொன்றை கூறுவார்கள். இவர்கள் உண்மைக்கு உண்மையாக செயற்பட்டிருந்தால் சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை எப்போதோ ஏற்படுத்தி தந்திருப்பேன். இந்த விடயம் நிறைவேற்றப்படாமல் போனமைக்கு நான் மிகவும் வேதனையடைகின்றேன். இங்கு வாக்குறுதியளித்து விட்டு, என்னிடம் வந்து அதனை செய்து கொடுக்க வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள்.

கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் சாய்ந்தமருத்துக்கு தனியாக உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்க நான் எடுத்த நடவடிக்கை தடைப்பட்டது.

சாய்ந்தமருதை மட்டும் தனியாக பிரித்தால் சிக்கல் ஏற்படும் என்று என்னை எச்சரித்தார்கள். தற்போது கல்முனையில் 80 வீதமாக இருக்கின்ற முஸ்லிம்களின் தொகை சாய்ந்தமருது தனியாக பிரியும்போது 60 வீதமாக குறைவடையும் என்றும் அதனால் நமது சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்கள். இந்த பிரதேசத்தில் பல தலைவர்கள் இருப்பதால் அவர்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கப்போவதில்லை என்றும் அதனால் கல்முனை மாநகர சபை விடயத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

கல்முனையை நான்காக பிரிப்பதென்பது இலகுவான விடயமல்ல. அதற்கு எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தமிழர்களுடனும் பேச வேண்டும். எவ்வாறாயினும் நானகாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நான் ஆலோசித்து விட்டு தமிழ் சமூகத்தின் தலைமையான சம்பந்தனுடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் பின்னர் தமிழ்- முஸ்லிம் தலைமைகள் பேசி முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டேன். இன்னும் முடிவில்லை.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் இன்றும் கூட இங்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் பேசினேன். அவர் கட்டாயம் சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத்தை வழங்குமாறு என்னை பணித்துள்ளார். நானும் இங்கு வந்து வாக்குறுதியளித்தவன் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதில் எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg