Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் பெண் வேட்பாளர்கள் கலந்து கொண்ட பத்திரிகையாளர் மாநாடு

In இலங்கை
Updated: 04:35 GMT, Jan 21, 2018 | Published: 04:35 GMT, Jan 21, 2018 |
0 Comments
1262
This post was written by : Rahul

பெண்களின் புதிய அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இம்முறை பெண்களின் வெற்றிக்காக வழி சமைப்போம் என உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர்களில் யாழ். மாநாகர சபை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற இராசதுரை ஹோமதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர்கள் ஒன்றிணைந்து நேற்று (சனிக்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில் “கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீண்டு சற்று மூச்சு விடும் தருணத்தில்தான் எமக்கு புரிகின்றது சத்தங்கள் ஓய்ந்தாலும் எமது சமூக, பொருளாதார, கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களின் இருப்பு கேள்விக்குரியதென்று. இதை மீளக் கட்டியெழுப்புவது குறித்து சிந்திப்பதற்கு முன்பாக எமது பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எமக்கென தனித்துவமானதொரு அரசியல் தளத்தினை ஏற்படுத்த, கடந்த கால அரசியலுக்கு மாறுபட்ட விதத்தில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் பண்பாட்டில் மேம்பாட்டினைக் கொண்டுவர வேண்டும். அதனால்தான் பெண்களாகிய நாம் பொறுத்தது போதுமென்ற நிலையில் நீதியையும் நியாயத்தினையும் எமது பிரதேசத்தில் நிலைநாட்ட இம்முறை உள்ளூராட்சிசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.

நீதிக்காகப் போராடத் தயாராகின்ற பெண்களாகிய நாம் இம்முறை புதியதொரு ஜனநாயக ரீதியிலான அரசியற் பண்பாட்டைப் படைக்கப் போவது உறுதி. எமது அரசியல் சமூகத்தில் வாழும் சகல மக்களையும் எவ்வித இன, மத, மொழி வேறுபாடின்றி அவர்களை மதித்து அவர்களின் தேவைகளை அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன் நிறைவேற்ற முன்னின்று செயற்படுவோம்.

யுத்தத்தினால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டோம். பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் பாதிப்புக்களிலிருந்து மீண்டு வர அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் தொழிநுட்ப ஆற்றல், தகைமை மற்றும் தலைமைத்துவம் பெறவும் அவர்களுக்கான ஒளிமயமான வாழ்வுக்கு வழிகாட்டவும் பெண்களாகிய நாம் இம்முறை தலைமைத்துவப் பொறுப்பினைத் தேர்தலில் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg