Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டாட்சியின் நீட்சி?

In இன்றைய பார்வை
Updated: 12:52 GMT, Jan 24, 2018 | Published: 12:52 GMT, Jan 24, 2018 |
0 Comments
1344
This post was written by : Varshini

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மனித உரிமைகளுக்கு எவ்வித மதிப்பும் தராமல் சர்வாதிகாரப்போக்கில் தான்தோன்றித்தனமாக ஆட்சிசெய்தபோது அதனை அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் காட்டாட்சி என்று அழைத்தனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு பாதுகாப்புத்தரப்பினர் கைக்கொண்ட மிலேச்சத்தனமான நடைமுறைகளுக்காக அன்றி சட்டத்தின் ஆட்சிக்கு புறம்பாக செயற்பட்டமைக்காகவே இந்த காட்டாட்சி என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தரவினை நடைமுறைப்படுத்தத் தவறிய பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலகத்தின் அதிபரை முழந்தாளிட வைத்து தண்டனை வழங்கிய சம்பவமானது கடந்த ஆட்சியில் அரசியல்வாதிகளின் மனநிலைகளில் இந்த ஆட்சியில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என்பதைக் கோடிட்டுக்காட்டிநிற்கின்றது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தபோது பௌத்த பிக்குகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் கைத்தொழிற்துறை ஊழியர்களை உள்ளடக்கியதான ‘பஞ்சமகா பலவேகய’ (ஐந்து பெரும் சக்திகள்) என்ற கருப்பொருளின் அடிப்படையிலேயே தனது அரசியல் தளத்தைக் கட்டியெழுப்பியிருந்தார்.

ஆனால் ஆண்டுகள் பலவும் உருண்டோடிய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பலவிதமான தீய சக்திகளும் உள்வாங்கப்பட்டனர். சமூகத்திற்கு எதிரான இந்த சக்திகள் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

2013ஆம் ஆண்டில் மஹிந்தவின் ஆட்சியின் போது அவரது கட்சியைச்சேர்ந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார பாடசாலையொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்து ஆசிரியரொருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் முன்னிலையில் முழந்தாளிட வைத்தார்.

தனது மகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தமைக்காகவே இவ்வாறாக அவர் செயற்பட்டிருந்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களும் பாதிக்கப்பட்டவரின் சார்பாக குரல்கொடுத்ததையடுத்து பலம்வாய்ந்த மஹிந்த அரசாங்கம் அழுத்தங்களுக்கு அடிபணியும் பாங்கில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது.

நல்லாட்சி நடத்துவோம் என 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கம் அவர் போன்றவர்களை தூரத்தள்ளிவைத்திருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆனமடுவ பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுங்கமைப்பாளராக அவரை நியமித்து பெருத்த ஏமாற்றத்தையளித்திருந்தார்.

சுதந்திரக்கட்சியிலுள்ள ஏனையோருக்கும் இது தவறான செய்தியை வழங்கியிருந்தது.

2013இல் ஆசிரியரில் கைவைத்தவர்கள் ஊவாவில் அதிபர் மீது கைவைக்குமளவிற்கு அராஜகத்தில் முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். நாளை கல்வித்திணைக்க அதிகாரிகள் மீதும் இவர்களின் கொடுங்கரங்கள் நீண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரட்டை வேட கூட்டு எதிரணி ஊவா முதலமைச்சரை இன்று கண்டித்துள்ளது. ஆனால் அன்று அமைச்சர் மேர்வின் சில்வா அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தண்டனை வழங்கியபோது வேடிக்கை பார்த்திருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாத்திரமன்றி இந்த நாட்டில் மாறி மாறி பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சட்டத்தின் ஆட்சி வரம்பை மீறி அராஜகத்துடன் நடந்த பல சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன.

பதின்ம வயதுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொலன்னாவ சுனில் என்பவருக்கு ஜே.ஆர்.ஜயவர்த்தன பொதுமன்னிப்பு வழங்கியபோது இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்ததையும் மறந்துவிடமுடியாது. அதேபோன்று 1999ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் ஆட்சிக்காலத்தில் வடமேற்கு மாகாணசபைத் தேர்தலை ஒட்டிய காலப்பகுதியில் ஐ.தே.க.வின் பெண் ஆதரவாளர்களை சந்திரிகா அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க சுதந்திரக்கட்சி அங்கத்தவர்கள் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக கொண்டுசென்ற துர்நிகழ்வும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான எண்ணற்ற அட்டூழியங்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதனை இந்த நாட்டில் இருந்து களைய வேண்டுமெனில் அரசியலின் அடிப்படைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்கள் கொண்டுவரப்படவேண்டும். பணமும் பதவியும் பலமும் உள்ளவர்கள் மாத்திரமே அரசியல் செய்யமுடியும் என்ற நிலை மாற்றமடைந்து மக்களுக்காக உண்மையாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடியவர்கள் வருவதற்கு வழிவகை செய்யப்படவேண்டும். அப்படி இன்றேல் காட்டாட்சி யுகத்தில் இருந்து மீட்சிபெறுவது சாத்தியமில்லை.

நிதர்ஷனன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg