உண்மையான வெற்றிப்பாதையில் பயணிக்க தேவையானது என்ன?
In இன்றைய பார்வை January 25, 2018 12:50 pm GMT 0 Comments 1621 by : Risha

பங்களாதேஷில் நடைபெற்றுவருகின்ற மும்முனை கிரிக்கட் தொடரின் ஆரம்பப்போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைத்தழுவிய இலங்கை அணி கடந்தபோட்டியில் ஸிம்பாப்பேக்கு எதிராகவும் இன்றைய போட்டியில் பங்களாதேஷிற்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற விதமானது மீண்டுமாக பல இலங்கை ரசிகர்களின் மனதில் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்மைய வெற்றிகள் பாராட்டப்படவேண்டியவைதான். ஆனால் கடந்தவருடத்தில் அடைந்த தொடர் தோல்விகளையும் இவ்வருடத்தில் அடைந்த தோல்விகளையும் ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டு ஆனந்தக்களிப்பில் திளைந்திருந்தால் மீண்டுமாக தோல்விகளில் இந்த அணி துவளும் போது வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதை புரிந்துகொள்வதற்கு நீண்டகாலம் பயணிக்கவேண்டியதில்லை.
கடந்தாண்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணியைத் தோற்கடித்து 9-0 என்ற வெள்ளையடிப்பை மேற்கொண்டிருந்தது. இதன் பின்னர் கடந்தாண்டு இறுதியில் இந்தியாவிற்கு இலங்கையணி விஜயம் மேற்கொண்டிருந்தபோது விளையாடிய முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி படுதோல்வியடையச் செய்திருந்தது. அதன் பின்னர் வந்த போட்டிகளில் இந்திய அணியிடம் தோல்விமேல் தோல்விகளைத் தழுவி ஊடகங்களதும் ரசிகர்களதும் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நாடுதிரும்பியது.
ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் அனைத்துமே சரியாகிவிட்டதாக கருதிவிடக்கூடாது மாறாக இலங்கை அணி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்க வேண்டுமாயின் கிரிக்கட் நிர்வாகத்திலும் கிரிக்கட் கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற உண்மை பல்வேறு மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கை அரசியலிலும் . தகவல் அறியும் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை போன்று அவ்வப்போது ஒரிரண்டு முன்னேற்றகரமான செயற்பாடுகள் நடப்பதுண்டு.
இது பாராட்டப்படவேண்டியதே. ஆனால் அரசியல் வாதிகள் எப்படிச் செயற்பட வேண்டும் அதிகாரிகளின் கடமை எப்படியிருக்க வேண்டும் போன்ற விடயங்களில் மாற்றம் வரும் வரையில் இந்த நாட்டை வினைத்திறன்மிக்க வெற்றிநாடாக மாற்றமுடியாது.
சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வந்துசென்ற தடம் இன்னமும் சூடாக இருக்கின்ற இந்த நிலையில் இலங்கை சிங்கப்பூரைப் பார்த்து திருந்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் பல உள்ளன. அந்த நாட்டில் ஒரு கட்டமைப்பு உள்ளது. அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலியது. அங்கு அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ லஞ்சம் பெறும் கலாச்சாரம் கிடையாது. இதுதொடர்பில் அங்கு கடந்தகாலத்தில் நிறைவேற்றப்பட்ட கடுமையான சட்டங்களும் கொடுக்கப்பட்ட தண்டனைகளுமே இன்றைய நிலைக்கு அந்த நாட்டை உயர்த்துவதற்கு அடித்தளமிட்டன. இலங்கை உண்மையான முன்னேற்றத்தைக் காணவேண்டுமாயின் அவ்வப்போது ஈட்டுகின்ற ஒரிரு வெற்றிகளில் தொங்கிக்கொண்டு புகழ்பாடாமல் அடிப்படைக்கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அப்போதே நின்று நிலைக்கக்கூடிய உண்மையான முன்னேற்றம் இந்த நாட்டில் சாத்தியமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.