Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு?

In
Updated: 13:37 GMT, Jan 27, 2018 | Published: 13:37 GMT, Jan 27, 2018 |
0 Comments
1380
This post was written by : Puvanes

வாழ்வின் துன்பத்திற்கான காரணத்தை அறிந்து ஞானம் பெற்ற கௌதம புத்தர் தனது போதனைகளைக் கூற அமர்ந்திருக்கின்றார். அவரின் வாய்மொழிக்காக சீடர்கள் பக்தியுடன் அவர் முன்னே அமர்ந்திருக்கின்றனர்.

ஒவ்வோர் சீடனின் முகத்திலும் இன்று என்ன கற்கப்போகின்றோம் என்ற கேள்வி கலந்த எதிர்பார்ப்பு தெளிவாகத் தெரிகின்றது. ஞானம் பெற்ற புத்தனுக்கு சீடர்களின் முகம் பார்த்து மனம் அறிவது கடினமா என்ன?

புன்முறுவலை முகத்தில் தவள விட்ட புத்தர் “ஒரு மனிதனின் ஆயுற்காலம் எவ்வளவு?” என்ற கேள்வியை முன்வைக்கின்றார்.

சட்டென்று சீடர் கூட்டத்தில் இருந்த ஒரு சீடன் “நூறு வருடங்கள் மனிதனின் ஆயுள்காலம்” என, பதில் சரியாகத்தான் இருக்கும் என்ற ஆர்வத்தோடு கூடிய பணிவுடன் கூறுகின்றான்.

கெளதம புத்தர் புன்னகைகோடு தவறான பதில் எனக்கூற சீடர்கள் மத்தியில் அமைதியோடு கூடிய சலனம். மீண்டும் ஒரு சீடன் எழுந்து “எழுபது வருடங்கள்” என்றதோர் பதிலை சந்தேகத்தோடு முன்வைக்கின்றான்.

புத்தரின் முகத்திலோ அதே பழைய புன்னகை அத்தோடு அதே பழைய பதில் “தவறு” என மென்மையோடு உதிர்க்கின்றது அவர் திருவாய். இதுவும் தவறாகிப்போய் விட்டதே என விளித்த சீடர்கள் எப்படியாவது பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.

அடுத்து வந்த “அறுபது” என்ற பதிலும் தவறாகிப்போக, ஐம்பது என்கிறார் மற்றுமோர் சீடன். இந்த பதிலுக்கும் புத்தரின் பதில் தவறு என்றே மறுமொழியளிக்கின்றது.

இப்படியாக அனைத்து பதிலும் தவறாகிப்போன சீடர்களுக்கு அடுத்த பதில் கூறுவதில் தயக்கம் ஏற்படுகின்றது. 100 வருடத்திற்கு மேல் வாழ்வது சாத்தியத்தன்மையற்றது அதேபோல ஐம்பது வருடங்கள் வாழவும் கூட மனிதனால் முடியாதா? என்ற பதில் கேள்வி சீடர்களுக்கு ஏற்பட அமைதியாக இருக்கின்றனர்.

சீடர்களின் அமைதி கண்ட புத்தர் அவர்களிடம் பதில் இல்லை என்பதை தெளிவாகவே அறிந்து கொள்கின்றார். அவர் முன்வைத்த கேள்விக்கு அவரே பதில் கூறுகின்றார் “மனிதனின் ஆயுள் ஒரு மூச்சு விடும் நேரம்” என்று.

பதிலுக்கான அர்த்தம் புரியாமல், வியப்போடு “மூச்சுவிடும் நேரம் கணப்பொழுது மாத்திரம் தானே? அவ்வளவு தான் ஆயுளா? என சந்தேகத்தோடு சீடர்கள் வினவுகின்றனர்.

“உண்மைதான் மனிதனின் ஆயுள் என்பது மூச்சுவிடும் நேரம் மாத்திரமே. வாழ்வு இருப்பது மூச்சு விடும் பொழுது மாத்திரமே. அதனால் ஒவ்வோர் கணமாக நாம் வாழவேண்டும்”

“மனித வாழ்வில் பலரும் மகிழ்ச்சிக்காகவும், எதிர்காலத்தை பற்றிய குழப்பத்தோடும் வாழ்கின்றார்கள். இது அறியாமல் செய்யும் தவறு. நேற்று என்பது முடிந்து விட்டது, அதுபோலவே நாளை என்பதும் தெரியாத ஒன்று”

“எனவே அவற்றில் தன் காலத்தை செலவிடுவது மடமைத்தனமானது. கடந்து போனதைம், இனி வரப்போவதையும் எண்ணாமல் வாழ்வதே அறிவு. அதனால் ஆயுள் என்பது மூச்சு விடும் கணம் மாத்திரமே” என விளக்கிய கௌதமரின் பதிலால் தெளிவடைகின்றனர் சீடர்கள்.

இந்த விடயம் அனைவரும் அறிந்தது தான் எனினும் மனிதர்கள் இப்படி வாழ்கின்றனரா? நேற்றைப்பற்றிய நினைவுக் கவலை, நாளை பற்றிய பயத்தின் ஆவல் இவற்றோடு தானே நகர்கின்றது மனிதரின் ஆயுள். தெளிவோடு வாழ்ந்தால் வாழ்வின் துயர் நீங்கும் அமைதி கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg