Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசாபிமானத்திற்கான தேடல்

In இன்றைய பார்வை
Updated: 06:02 GMT, Feb 4, 2018 | Published: 05:55 GMT, Feb 4, 2018 |
0 Comments
1412
This post was written by : Varshini

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் பிரதான உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களிடம் முக்கியமான வேண்டுகோளொன்றை விடுப்பதாக கூறினார். ‘தேசாபிமானத்தோடு செயற்படுங்கள்’ என்பதே அந்த வேண்டுகோளாக அமைந்தது.

தேசாபிமானம் என்பது கேட்டு வரவேண்டிய ஒரு விடயமல்ல. மாறாக உள்ளங்களில் உவகையோடு ஒன்றித்திருக்க வேண்டிய உணர்வு.

சுதந்திரம் பெற்றது முதற்கொண்டு எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை எப்படிப் பறிக்கலாம்? ஆட்சியதிகாரத்திலிருந்து அவர்களை எப்படி புறமொதுக்கலாம்? முழுமையான இலங்கையர் அந்தஸ்தை அவர்கள் அனுபவித்துணராதிருக்க எவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பதில் சுதந்திரம் பெற்ற காலப்பகுதி முதலாக மாறிமாறி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தியதன் விளைவையே இன்று நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது.

எமது அண்டை நாடான இந்தியாவும் நாம் சுதந்திரம் பெற்ற காலப்பகுதியிலேயே சுதந்திரம் பெற்றது. ஆனால் இன்றோ பல்வேறு வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும்கூட இந்தியர்களிடத்தில் பொதுவாகக் காணப்படுகின்ற தேசாபிமானத்தை இலங்கையர்களிடத்தில் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் காணமுடியாதமைக்கு மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட விதமே காரணமாகும்.

சுதந்திரம் பெற்றதும் முதல்வேலையாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்யும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறிக்க சட்டம் நிறைவேற்றியவர்கள் (இதில் சில தமிழர்களும் உடந்தையாக இருந்தமை வேதனை என்பதைவிட வரலாற்றுத்தவறு) தேசாபிமானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய தவறை இழைத்தனர். சில ஆண்டுகளின் பின்னர் 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டுவந்தபோது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் தாம் இரண்டாந்தர பிரஜைகள் என உணர வழிகோலப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக தரநிர்ணயச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவை சிறுபான்மையினரிடத்தில் இலங்கையர் என்ற உணர்வை தூரப்படுத்துவதற்கு வழிகோலின.

சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களுமே இந்த நாட்டில் மூன்று தசாப்த ஆயுதப் போராட்டத்திற்கும் வழிகோலின என்பதை உணராது பெரும்பான்மை ஆட்சியாளர்கள் தேசாபிமானத்தை எப்படி எதிர்பார்க்கமுடியும்?

26 வருடகாலமாக நாட்டில் விடுதலைப்புலிகள் முன்னெடுத்த உரிமைக்கான போரை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி தமது கையாலாகாத்தனத்தை மறைக்க முற்படும் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தேசாபிமானத்தை எப்படி தமிழ் மக்களிடம் கட்டியெழுப்பமுடியும்?

விடுதலைப்புலிகள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து இந்த நாட்டில் போராட்டத்தை நடத்தவில்லை. அவர்களுடைய ஆயுதப் போராட்டம் மிலேச்சத்தனமாக தோற்கடிக்கப்பட்டதற்காக அதனைப் பயங்கரவாதமாக காண்பித்து தமிழர்களின் பிள்ளைகளை பயங்கரவாதிகளாக தொடர்ந்துமே காண்பித்துக்கொண்டிருந்தால் தேசாபிமானத்தோடு தமிழர்கள் செயற்படுவார்கள் என்று எவரேனும் நினைத்தால் அது பகற்கனவாகவே இருக்கும்.

விடுதலைப்புலிகள் உட்பட இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்கள் அதற்காக முன்வைத்த காரணங்கள் என்ன, அவை களையப்பட்டுவிட்டதா என்பதை ஆராய்ந்து ஆட்சியாளர்கள் அதற்கு தீர்வுகளைத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலில் வெல்வதற்காக தமது கட்சிக்காரர்களை உசுப்பேற்றுவதற்காக வேண்டுமானால் இப்படியான பயங்கரவாத சித்தரிப்புக்களும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான வெற்றுக்கோஷங்களும் தற்காலிகமாக துணைபோகமுடியும்.

ஆனால் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அதனூடாக நின்றுநிலைக்கக்கூடிய தேசாபிமானத்தை மக்கள் மனங்களில் விதைப்பதற்கும் கண்துடைப்பான அறிவிப்புக்களும் செயற்பாடுகளும் கைகொடுக்கமாட்டாது.

மாறாக நாட்டிலுள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களையும் ஆட்சியதிகாரத்தில் உள்வாங்குவதற்கும் அவர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும் உத்தரவாதமளிக்கின்ற அரசியல் யாப்பு, அதனை நடைமுறைப்படுத்துகின்ற இதயசுத்தியுடனான அர்ப்பணிப்பு, கடந்தகாலத்தில் இடம்பெற்ற தவறுகளை மீண்டும் செய்யாதிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் பொறுப்புக்கூறல் நடவடிக்கை, வெளிவேடத்திற்காக காண்பிக்கும் நல்லிணக்க செயற்பாடுகள் அன்றி மக்களின் மனங்களை வென்றெடுக்கும் திடசங்கற்பத்தோடு முன்னெடுக்கப்படும் காத்திரமான நல்லிணக்க செயற்பாடுகளே இந்த நாட்டில் தேசாபிமானத்தை தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து மக்கள் மத்தியிலும் கட்டியெழுப்ப வழிகோலும்.

ஏகலைவன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg